சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறியிருந்தீர்கள் எப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், நிச்சயமாக சசிகலாவை சந்திப்பேன், அவசரப்படாதீர்கள் பத்திரிகைகளிடம் சொல்லிவிட்டுதான் சந்திப்பேன் என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலைகளிலும் அனைத்து தரப்பிலும் இந்தியத் திருநாட்டை ஒரு முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கின்ற ஒரு சிறப்பான பட்ஜெட் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பட்ஜெட்டினுடைய சாரம்சத்தைப் புரிந்துகொண்டு தமிழக அரசு, அதை முறையாக மத்திய அரசினுடைய திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், “விரிவான நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எந்த சின்னத்தில் உங்கள் வேட்பாளர் போட்டியிட உள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.ஸ், “அ.தி.மு.க சட்ட விதிப்படி நடந்த, கழக அமைப்பு ரீதியான தேர்தலில், ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். 2026 வரை எங்களுடைய பதவிக் காலம் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இரட்டை இலைச் சின்னத்துக்கு கேட்டு வந்தால், நான் ஏற்கெனவே கையெழுத்து இடுவேன் என்று கூறியிருக்கிறேன்.” என்று கூறினார்.
சசிகலா-வை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று கூறினார். எப்பொது சந்திப்பீர்கள் என்றதற்கு, ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று கேட்டு ஓ.பி.எஸ் சிரித்தார்.
ஈரோழு கிழக்கு இடைத்தேர்தலில், பா.ஜ.க ஆதரவு கேட்டால் ஆதரவு தருவோம் என்று கூறியிருந்தீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், முறைப்படியான அறிவிப்பை நானும் பா.ஜ.க-வும் அறிவிப்போம் என்று கூறினார்.
அ.தி.மு.க-வில் நீடிக்கும் பிளவு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “அ.தி.மு.க-வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக மக்களும், பா.ஜ.க-வும் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இன்று வரை இருக்கிறது” என்று கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஓ.பி.எஸ் தான் சில கருத்துகளைக் கேட்டிருப்பதாக பதிலளித்தார். “பேனா சின்னத்தை நிறுவுவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று நான் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். அங்கே வாழ்கிற மீனவர்களிடம் கருத்து கட்டிருக்கிறேன். அதனால், மீன்வளம் பாதிக்கப்படுமா என்று கேட்டிருக்கிறேன். இன்னும் தகவல் வரவில்லை. கடலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்களின் சங்கங்களிடம் அவர்களின் கருத்துகளை நான் நேரடியாக கேட்டு அறிந்துகொண்டிருக்கிறேன். அவை முழுமையாக கிடைக்கப்பட்ட பின்னர், அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டை நான் உறுதியாகத் தெரிவிப்பேன்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.