உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை அ.தி.மு.க-வின் தோல்விக்கு, எடப்பாடி பழனிசாமி எடுத்த ஒற்றை தலைமை முடிவு தான் காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, "அ.தி.மு.க-வை எத்தகைய உயரத்திற்கு ஜெயலலிதா கொண்டு சென்றார் என அனைவருக்கும் தெரியும். அவரது மறைவிற்கு பிறகு நிறைய அரசியல் சூது, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் என பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை ஏறத்தாழ 11 தேர்தல்களில் அ.தி.மு.க தோல்வியை சந்தித்தது.
ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என அடம்பிடித்து அதனை ஏற்றுக் கொண்டவர்கள் தான் இவை அனைத்திற்கு பதில் கூற வேண்டும். அ.தி.மு.க-வின் வசந்த காலத்தை இவ்வாறு மாற்றியவர்கள் யார் என எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அனைவரின் பெயரையும் வருங்காலத்தில் நான் தவிர்க்க வேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது.
அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை நாங்கள் கூறினால் அசிங்கமான உதாரணங்களுடன் பேசுகின்றனர். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த இயக்கத்திற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளனர். மக்களால் போற்றப்படும் இயக்கமாக அ.தி.மு.க-வை வளர்த்து எடுத்தார்கள்.
அந்த நிலை மீண்டும் வர வேண்டும் என்று தான் தொண்டர்கள் நினைக்கிறார்கள். தொண்டர்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று தான் நாங்கள் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
மனசாட்சி இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். தமிழக மக்கள் விரும்புவது இருமொழிக் கொள்கை தான் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றினர். ஜெயலலிதாவும் அதே நிலைப்பாடு தான் கொண்டிருந்தார்" என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.