scorecardresearch

முதல்வரின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திமுகவினர் குந்தகம்: ஓபிஎஸ் அறிக்கை

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்திட வேண்டும் என்றும் முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு திமுகவினர் குந்தகம் விளைவிப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வரின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு திமுகவினர் குந்தகம் விளைவிப்பதாகவும் அண்ணாவின் மேற்கோளை குறிப்பிட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக தினசரி சுமார், 30 ஆயிரத்துக்கு மேல் புதிய தொற்றுகள் பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் 450க்கு மேல் இறப்புகள் பதிவாகி வருகிறது. அதனால், மே மாதம் 3வது வாரத்தில் இருந்து தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை முதல்வர் மு.க.மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்திட வேண்டும் என்றும் முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு திமுகவினர் குந்தகம் விளைவிப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கட்சியும் சர்க்காரும் தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது. இணைந்தும் போய் விடக் கூடாது. தனித்தன்மையுடன் தனியாக இருக்க வேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கு முற்றிலும் முரணான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தத்திற்குரியது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி முகாமில், தடுப்பூசியின் இருப்பைக் கணக்கில் கொண்டு, கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடிய தொழிலாளர்களான செய்தித்தாள் போடுபவர்கள், பால் விற்பனையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், மின் வாரியப் பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து மே 22ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட லக்காபுரத்தில் மே 27ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப் பணியாளர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தடுப்பூசி முகாமிற்கு சென்றதாகவும், ஆனால் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், பக்கவாட்டு வழியாக தி.மு.க. பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும் திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், முகாமிற்கு வெளியே நின்றிருந்த முன்களப் பணியாளர்கள் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் முன்களப் பணியாளர்களை அலைக்கழிப்பதுடன், கரோனா பரவல் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. இது மட்டுமல்லாமல், தமிழக முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க.வினரின் இதுபோன்ற செயல் குந்தகம் விளைவிப்பது போல் உள்ளது.

எனவே, மே 22ம் தேதி நாளிட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை எண் 252- ன் படி, தடுப்பூசியின் இருப்பிற்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியில் உள்ள முன்னுரிமைப் பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல்துறையினரின் உதவியுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதுபோன்ற முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: O panneerselvam statement dmk cadres defamed on cm mk stalins good actions