அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மதுரையில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க-வின் தலைமைப் போட்டியில் வெற்றிபெறப் போவது யார் என்பது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 24-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது.
மேலும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவுகளைத் தீர்ப்பு வெளியாகும் வரை வெளியிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாலர் இ.பி.எஸ்-தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது.
அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அவருடைய பதவியை வேறு யாருக்கும் தரக்கூடாது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை பழங்காநத்தத்தில், எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஓ. பன்னீசெல்வம் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
எம்.ஜி.ஆர் வகுத்த அ.தி.மு.க-வின் சட்ட விதிகளை காலில் மிதித்து, மறைந்த ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி சசிகலாவை தூக்கி எறிந்தார். டி.டிவி தினகரனை தூக்கி எறிந்தார். இப்போது ஓ.பி.எஸ்-ஐ தூக்கி எறிந்துள்ளார். ஓ.பி.எஸ் சாதாரணமானவர் அல்ல. ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர். இதுவரை 8 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளதால் எட்டுத் தோல்வி எடப்பாடி பழனிசாமி, மோசமாக் தோல்வியை சந்திப்பார் என இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றினைந்து தேர்தலை சந்தித்தால் 40 தொகுடிகளிலும் வெற்றி பெறலாம் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“