அதிமுக உள் அரசியலில் மோடி : இப்போது ஏன் உடைத்தார் ஓபிஎஸ்?

பிரதமர் நரேந்திர மோடியை திடுதிப்பென அதிமுக உள் அரசியலில் ஓபிஎஸ் இழுத்து விட்டது ‘ஹாட் டாக்’ ஆகியிருக்கிறது. எதற்காக இந்த திடீர் கலாட்டா?

ச.செல்வராஜ்

பிரதமர் நரேந்திர மோடியை திடுதிப்பென அதிமுக உள் அரசியலில் ஓபிஎஸ் இழுத்து விட்டது ‘ஹாட் டாக்’ ஆகியிருக்கிறது. எதற்காக இந்த திடீர் கலாட்டா?

பிரதமர் நரேந்திர மோடியே அதிமுக உள் அரசியலை ஆட்டிப் படைக்கிறார் என்கிற புகாரை கடந்த ஓராண்டாகவே தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் அதிமுக தரப்பில், ‘அதிமுக.வுக்கும் பாஜக.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழக திட்டங்களுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்’ என கிளிப்பிள்ளை போல கூறினார்கள். ஆனால் நேற்று (பிப்ரவரி 16) தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘அணிகள் இணைப்புக்கு முன்பு நான் டெல்லியில் பாரதப் பிரதமரை சந்தித்தேன். அவர் கட்சியைக் காப்பாற்ற இணைந்துவிடும்படி என்னைக் கேட்டார்.

அப்போதும், கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், அமைச்சர் பொறுப்பு வேண்டாம் என்றும் கூறினேன். காரணம், எனக்கு அம்மா எல்லாப் பொறுப்புகளையும் கொடுத்தார். 4 முறை எம்.எல்.ஏ., இருமுறை அவரே என்னை முதல் அமைச்சராக்கினார். இனி எந்தப் பதவி மீதும் எனக்கு ஆசை கிடையாது. ஆனால் அமைச்சரவையில் சேரும்படி மோடி கேட்டார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் அமைச்சர் பதவியை ஏற்கச் சொன்னார்கள். அதனால் ஏற்றுக் கொண்டேன்.’ என முதல் முறையாக அணிகள் இணைப்பு ரகசியத்தை உடைத்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் எந்த விஷயத்தையும் உணர்ச்சி வசப்பட்டோ, திட்டமிடாமலோ பேசிவிடக் கூடியவர் இல்லை. அதிலும் பிரதமர் மோடியின் பெயரை ஒரு விஷயத்தில் கோர்த்து பேசுவது என்றால், நூறு முறையாவது அது குறித்து யோசித்திருப்பார். அணிகள் இணைந்து ஓராண்டு கடந்த நிலையில், இப்போது மோடியை அதிமுக உள் அரசியலில் அவர் இழுத்து விட்டது ஏன்? என்பதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைக்கும் கேள்வி!

அதிமுக சீனியர் ஒருவரிடம் இது குறித்து பேசினோம். ‘அதிமுக தலைமைக்கு சமீப நாட்களாக டெல்லியில் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பு விழாவில் மோடி மட்டுமல்ல… ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தும் பங்கேற்காதது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு மோடி இன்னமும் தேதி கொடுக்காதது, ஓகி புயல் நிவாரணம் கோரி சந்திக்க அப்பாய்ன்மென்ட் கொடுக்காதது என இதற்கு பல உதாரணங்களை கூற முடியும்.

அதிமுக அரசை டெல்லி புறக்கணிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் காரணமாக இருந்து விட்டுப் போகட்டும். ஓபிஎஸ் கடந்த ஓராண்டில் ஒரு இடத்தில்கூட டெல்லியின் மனம் நோகும்படி பேசவில்லை. ஓரிரு முறை டெல்லிக்கே சென்று காத்திருந்தபோதும், பிரதமரின் அப்பாய்ன்மென்ட் கிடைக்காததில் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார் அவர். இந்தப் பின்னணியில்தான் மோடியின் தூதராக சொல்லப்படும் மைத்ரேயனுடனும் ஓபிஎஸ்.ஸுக்கு மனத்தாங்கல்!

டெல்லிக்கு தனது மன வருத்தத்தை தெரிவிக்கும் விதமாக கடந்த ஓரிரு நாட்களாக மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துகளை பேச ஆரம்பித்தார் ஓபிஎஸ். குறிப்பாக, ‘தமிழகம் வளர்ந்த மாநிலம் என்பதை காரணம் காட்டி, மத்திய நிதிக்குழுவின் பங்களிப்பை குறைப்பதாக’ சுட்டிக் காட்டினார் ஓபிஎஸ். இதே கருத்தை முன்பு ஜெயலலிதா பலமுறை பேசியிருக்கிறார். அவர் மரணம் அடைந்த பிறகு இப்போதுதான் முதல் முறையாக அந்தக் கருத்தை ஓபிஎஸ் முன் வைக்கிறார்.

தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதற்கும், ‘அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என கடுமையாக ரீயாக்ட் செய்தார் ஓபிஎஸ். கடந்த ஓராண்டு காலமாக பல கூட்டங்களில் அதிமுக அரசின் ஊழல்கள் குறித்தே பொன்னார் விமர்சித்திருக்கிறார். அப்போதெல்லாம் ஓபிஎஸ் பொங்கவில்லை.

இப்படி ஜாடை மாடையாக டெல்லிக்கு தனது மன சங்கடத்தை வெளிப்படுத்திய பிறகும், அங்கிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அதனாலேயே அடுத்தகட்டமாக, ‘என்னை இபிஎஸ் தரப்புடன் இணையச் சொன்னது மோடிதான்’ என போட்டு உடைத்திருக்கிறார். அதே கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக மோடி பேசியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.

‘30 ஆண்டுகளாக அதிமுக.வை சசிகலா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எனக்கு அவர்கள் கொடுத்த நெருக்கடிக்கு இன்னொருவராக இருந்தால் தற்கொலை செய்திருப்பார்’ என குறிப்பிட்டார் ஓபிஎஸ். இதன் மூலமாக இன்னமும் மோடியின் விருப்பப்படி சசிகலா எதிர்ப்பு நிலையில் தான் உறுதியாக இருப்பதாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ். ஆக, ஓபிஎஸ்.ஸின் தேனி பேச்சு முழுக்க டெல்லிக்கு சில விஷயங்களை உணர்த்த திட்டமிட்டு பேசப்பட்டவைதான்’ என்கிறார் அவர்.

ஆனால் அதிமுக.வில் இன்னொரு தரப்பினரோ, ‘தனி அணியாக ஓபிஎஸ் இருந்தபோது தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கான தலைவராக அவர் பார்க்கப்பட்டார். அணிகள் இணைப்புக்கு பிறகு அவரது செல்வாக்கு சரிந்துவிட்டது. அதுவும், துணை முதல்வர் பதவிக்காக அவர் இணைந்ததாக இன்றளவும் விமர்சனங்கள் இருக்கின்றன.

ஓபிஎஸ் அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற போதும், அவருடன் சென்ற 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. ஆர்.கே.நகரில் மதுசூதனனை தோற்கடித்தவர்களில் ஒரு கிளைச் செயலாளர் மீது கூட அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே ஆதரவு நிர்வாகிகளும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

எனவே, ‘நான் பதவி ஆசையில் இணைப்பை நடத்தவில்லை’ என ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய நெருக்கடி அவருக்கு! தவிர, ஆட்சி கவிழும் சூழல் உருவானால் இபிஎஸ் அணியினர் மெஜாரிட்டியாக டிடிவி தினகரன் பக்கம் போய்ச் சேர வாய்ப்பு இருப்பதாக ஓபிஎஸ் நினைக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் சிலரே சசிகலா தரப்புடன் ஆரம்பித்துவிட்டதாகவும் ஓபிஎஸ்.ஸுக்கு தகவல் வருகிறது. மத்திய அரசின் பாராமுகத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஓபிஎஸ் கருதுகிறார். எனவேதான் தனது சசிகலா எதிர்ப்பு நிலையையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார் ஓபிஎஸ்.’ என்கிறார்கள் இவர்கள்.

‘குறிப்பிட்ட 6 அமைச்சர்களை நீக்கினால், இந்த அரசை ஆதரிப்போம்’ என சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் டிடிவி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், ஆட்சியை காப்பாற்ற இபிஎஸ்-டிடிவி தரப்புகள் இடையே பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறியே அது! அப்படியொரு சூழல் உருவானால், பழைய மாதிரி 11 எம்.எல்.ஏ.க்கள்கூட ஓபிஎஸ் பக்கம் செல்ல மாட்டார்கள்.

எனவேதான் தொண்டர்களை ஈர்க்கும் விதமாக, ‘எனக்கு பதவி ஆசை இல்லை’ என்றும், ‘சசிகலாவுக்கு நான் எதிரானவன்’ என்றும் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

அதிமுக.வின் உள்வட்டத்தில் அரங்கேறும் சில பல நிகழ்வுகளின் ரீயாக்‌ஷன்தான், ஓபிஎஸ்.ஸின் தேனி கொந்தளிப்பு என்பது மட்டும் நிஜம்!

 

×Close
×Close