scorecardresearch

ஓ.பி.எஸ் பராக்… தொண்டர்கள் மனநிலை அறிய மதுரை பயணம்!

மதுரைக்கு வந்த ஓ.பி.எஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பி.எஸ் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறினார்.

ஓ.பி.எஸ் பராக்… தொண்டர்கள் மனநிலை அறிய மதுரை பயணம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக இ.பி.எஸ் உறுதியான திட்டத்துடன் செயல்பட்டு வருவதால், ஓ.பி.எஸ் வியூகங்களை வகுக்க தொண்டர்களின் மனநிலையை அறிய மதுரை பயணம் செய்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பேச்சால் ஜூன் 14 முதல் பெரும் சூறாவளியே வீசி வருகிறது. பொதுக்குழு பெரும் களேபரமாக நடந்தது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இ.பி.எஸ்-ன் கைகளே ஓங்கி இருக்கிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே, அதிமுகவைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, ஓ.பி.எஸ் ஆதரவாளரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ் அதிமுக தொண்டர்கள் மனநிலை அறிய மதுரை பயணம் மேற்கொண்டார்.

இதனிடையே, அதிமுக மூத்த தலைவரும், இ.பிஎஸ் ஆதரவாளருமான முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், உட்கட்சி விவகாரங்களில் மூன்றாவது கட்சியான பாஜகவின் தலையீட்டை அதிமுக ஒருபோதும் ஏற்காது என்று கூறினார்.

சென்னை, தி.நகரில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கோவை கே.செல்வராஜ், அ.தி.மு.க.வை ‘கம்பெனி’ போல் நடத்தி அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல இ.பிஎஸ் குழு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். 18 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சென்றபோது 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி கவிழாமல் இருக்க 3 முன்னாள் அமைச்சர்கள் ஓ.பி.எஸ் காலில் விழுந்தனர். அதிமுக அரசை காப்பாற்ற ஓ.பி.எஸ் எந்த நிபந்தனையும் இன்றி தனது அணியை இ.பி.எஸ் அணியுடன் இணைத்தார்.

அன்றைக்கு ஆட்சியைக் காப்பாற்ற ஓ.பி.எஸ் தேவைப்பட்டார். இ.பி.எஸ் முதல்வர் ஆவதற்கு சசிகலா தேவைப்பட்டார். இப்போது மற்றவர்களையெல்லாம் முதுகில் குத்திவிட்டு கட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்” என்று செல்வராஜ் கடுமையாக விமர்சித்தார். சில உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசுவது போன்ற காட்சிகளைப் பார்த்ததும், நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் தலைவரை அணுகினர். ஆனால், ஓபிஎஸ் அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறியதாக செல்வராஜ் கூறினார்.

இரட்டைத் தலைமை காலாவதியாகிவிட்டதாக இ.பி.எஸ் அணியினர் கூறியதை நிராகரித்த செல்வராஜ், அப்படியானால் அமைப்புத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிந்துவிட்டது என்று கூறினார். பொதுக்குழுவால் நிராகரிக்கப்பட்ட 23 தீர்மானங்களில் ஒன்று அவர்களின் தேர்தலுக்கான பொதுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவது. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த தமிழ் மகன் உசேன் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக அவரது குழுவே கூறிக்கொண்டிருக்கும்போது, ​​இ.பி.எஸ் எப்படி தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக அறிவிக்க முடியும்? உசேனின் தேர்தல் செல்லாது” என்று செல்வராஜ், இபிஎஸ் தலைமைக்கு ஒப்புதல் அளிக்கும் சிறப்புப் பொதுக்குழு என்ற உசேனின் அறிவிப்பு செல்லுபடி ஆகாது என்று கூறினார்.

அரசியல் நாகரிகம், பண்பாடு தெரியாதவர்கள், அராஜகத்தில் ஈடுபடுவோர் ஆகியோர் மக்களுக்கு எப்படித் தொண்டாற்ற முடியும். ஜூலை 11-ல் பொதுக்குழு நடைபெறும் என்பது, வெறும் கனவாகவே இருக்கும். அதிமுகவை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. கட்சியைப் பாதுகாக்க ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். ஓபிஎஸ் இருக்கும் வரை பழனிசாமியின் வேலைகள் பலிக்காது. இனி அவர் துணிந்து செயல்படுவார்.

கட்சியே ஓபிஎஸ் தலைமையில் இருக்கிறது. அதனால், ஓபிஎஸ் டெல்லி பயணத்தின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்க அவசியம் ஏற்படவில்லை.

மாவட்டச் செயலர்கள் முறைகேடான நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் விசாரணையில் உள்ளது. விதிகளை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகள் விரைவில் ரத்து செய்யப்படும்.

மே 5ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் தொண்டர்களை சந்திக்க உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் ஓ.பி.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுமக்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணம் 5ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நீடிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ்-இன் சுற்றுப்பயணம் அரசியல் வரலாற்றில் புதிய பல திருப்பங்களை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் அதிமுக தொண்டர்களின் மனநிலையை அறிய இன்று மதுரைக்கு சென்று அங்கிருந்து தேனிக்கு தனது வீட்டுக்கு சென்றார். தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில் மதுரைக்கு வந்த ஓ.பி.எஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பி.எஸ் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்றார். அது போல் தொண்டர்களுக்காகவே நான், தொண்டர்களுடனே நான் என்றும் இருப்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை மனிதாபிமான இயக்கமாக நடத்தினார்கள். தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று 30 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக நல்லாட்சி நடத்தியவர்கள்.

எனது அரசியல் எதிர்காலத்தை தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள். அதிமுகவில் யாரால் சதி வலை பின்னப்பட்டது என்பதற்கு கூடிய விரைவில் மக்களே அவர்களுக்கு நல்ல தீர்ப்பையும் தண்டனையையும் தருவார்கள். விரைவில் எல்லா சிக்கல்களும் தீரும். இந்த சிக்கலுக்கு யார் காரணம் என்பதும் எனக்கு தெரியும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

மதுரையிலும் தேனியிலும் ஓ.பி.எஸ்-க்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அவருடைய பிரச்சார வாகனத்தில் இருந்த இ.பி.எஸ் படத்தை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சுரண்டி அழித்தனர். மதுரையில் ஓ.பி.எஸ்-ஐ வரவேற்ற தொண்டர்கள் இ.பி.எஸ்-க்கு எதிராக முழகக்கமிடனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: O panneerselvam travel to madurai to know aiadmks cadres pulse

Best of Express