டிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாக வெளியாகியிருக்கும் தகவல் அதிமுக.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் டிடிவி தினகரன் துணையுடன் வளர்ந்தவர்! டிடிவி தினகரன் தேனி மக்களவை எம்.பி.யாக இருந்தபோது உருவான நெருக்கம் அது! ஆனால் நாளடைவில் சசிகலா குடும்பத்தினருக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வர் பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் நேரடி டெல்லி தொடர்புகளால் வலுப்பெற ஆரம்பித்தார். இதற்கு செக் வைக்க நினைத்த சசிகலா, தானே முதல்வர் ஆக திட்டமிட்டார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்தது.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு சிறை சென்றார் சசிகலா. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை வெளியேற்றினர்.
2017 ஆகஸ்ட் முதல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் முதல்வர் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வகித்து வருகின்றனர்.
இதற்கிடையே சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த சூழ்நிலையிலேயே ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக டிடிவி தினகரனை சந்தித்ததாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது. இந்தத் தகவலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் வெளியிட்டார்.
தங்க தமிழ்செல்வன் இது தொடர்பாக அளித்த பேட்டி வருமாறு: ‘தர்மயுத்தம் நடந்தபோதே டிடிவி-யை சந்தித்து, ‘என்னை முதல்வர் ஆக்குங்கள்.’ என ஓபிஎஸ் கேட்டது உண்மை. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் கூட இருந்தார்.
அப்போது மட்டுமல்ல, போன வாரம் அதே போல ஒரு பொது நண்பரிடம், ‘டிடிவி-யை சந்திக்கணும். அப்பாய்ன்மெண்ட் வாங்கித் தாங்க’ என ஓ.பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் மிக மோசமாக ஓபிஎஸ் பேசியிருக்கிறார்.
இதன்பிறகுதான், ‘இவர் ஏன் இந்த இரட்டை வேடம் போடுகிறார்’ என நடந்த உண்மையை டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் சொன்னார். மற்றபடி இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே மோதலை உருவாக்கவோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ இதை கூறவில்லை’ என்றார் தங்க தமிழ்செல்வன்.
2017 ஜூலை 17-ம் தேதி டிடிவி தினகரனை ரகசியமாக ஓபிஎஸ் சந்தித்ததாகவும், ஓபிஎஸ்.ஸின் உதவியாளர் ரமேஷ் உடன் இருந்ததாகவும் நேற்றே (அக்டோபர் 4) பேட்டி கொடுத்தார் தங்க தமிழ்செல்வன். ஆனால் இது குறித்து இன்று (அக்டோபர் 5) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அது கடந்த காலம். அந்தப் பேட்டியை நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு விரிவாக பதில் பேட்டி கொடுக்கிறேன்’ என்றார்.
டிடிவி தினகரனை ஏற்கனவே சந்தித்ததாகவும், தற்போது சந்திக்க அப்பாய்ன்மென்ட் கேட்டிருப்பதாகவும் ஓபிஎஸ் குறித்து வெளியாகியிருக்கும் இந்தத் தகவல் அதிமுக.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் கொடுக்க இருப்பதாக கூறிய விரிவான பேட்டியில் என்ன சொல்லப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
டிடிவி தினகரன் தரப்பு கிளப்பியிருக்கும் இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு திகைப்புடன் கவனித்து வருகிறது. அதிமுக.வில் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்குவதை இந்த விவகாரம் கட்டுப்படுத்தும் என கருதப்படுகிறது.