ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை மக்களினிடையே வைக்க முன்வருகின்றனர்.
இதனிடையே அதிமுக கட்சியில் பல அணிகள் இருப்பதால் இந்நிலைப்பாட்டை எடுப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ஆகையால் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "இன்று வரை அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளராக, டிசம்பர் மாதம் நடந்த கழக அமைப்பு ரீதியான தேர்தல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டது.
அந்த தேர்தலில் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில், என்னை ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் 2026ஆம் ஆண்டு வரை நியமித்தார்கள். ஆகவே, எங்களுக்கு இரட்டையிலை சின்னம் பெற முழு உரிமை இருக்கிறது.
பாஜக போட்டியிட்டு எங்களிடம் அவர்களின் விருப்பத்தை தெரிவித்தால், முழுமையாக எங்களது ஆதரவை தெரிவிப்போம். அவர்கள் தேசிய கட்சியாக இருப்பதால், மற்றும் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்நோக்கி இருப்பதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு இது ஒரு நல்வாய்ப்பாக ஏற்படும் என்ற அடிப்படையில் கருதி எங்களுடைய ஆதரவை அளிப்போம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் நின்று வெற்றிபெறவில்லை. அது மாநில கட்சியான, தமிழ் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட தொகுதி. ஆனால், அவர்கள் போட்டியிட விரும்பவில்லை என்று கூறியதனால், இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கு தங்களது கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது.
அந்த உரிமை அடிப்படையில், யார் கேட்டாலும் தலைமை கூடி முடிவெக்கும், அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதியாக நாங்கள் ஆதரவளிப்போம்.
தற்போது ஆட்சியில் உள்ள திமுக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் ஆட்சி புரிவதை நம்மால் பார்க்கமுடிகிறது. அதனால், உறுதியாக அதிமுக மாபெரும் வெற்றியடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனவரி 23ஆம் தேதி நடக்கவிருக்கின்ற மாபெரும் மாவட்டச் செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் கூட்டம் உறுதியாக நடக்கும். அந்த கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்களுடைய கருத்துக்களையும், தலைமை செயலாளர்களுடைய கருத்துக்களையும் கேட்டு நாங்கள் ஒரு நல்ல முடிவை தெரிவிப்போம்", என்று தெரிவித்திருக்கிறார்.