வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு கடந்த பத்தாண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்த மோடி, மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயலாற்றி வருவதாக கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியில் ஓ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை மற்றும் அ.தி.மு.க மீட்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது;
ஜனவரி 19 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருகின்றது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவு கிடைக்கும். ஈரோட்டில் இரட்டை இலை தற்காலிகமாக தான் கொடுக்கப்பட்டது. என் மீது என்ன குற்றம் சொல்கின்றனர்? என்னை நீக்குவதற்கு என்ன காரணம் சொல்கின்றனர்? யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதை சொல்ல முடியுமா? இப்பொழுதும் அ.தி.மு.க.,வுக்கு விசுவாசமாக இருக்கின்றேன்.
ஒன்றுபட்டால் தான் வெற்றி அடைய முடியும். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியவேண்டும். இதை காதில் வாங்க மாட்டேன் என்கின்றனர். மக்களின் அபிமானம், தொண்டர்களின் அபிமானத்தை பெற வேண்டும் என சொல்கிறேன். அதை கேட்க மாட்டேன் என்கின்றனர். நாங்கள் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுவதாக சொல்பவன் முட்டாள்.
அ.தி.மு.க நிர்வாகிகள் மீது எத்தனை வழக்குகள் இருக்கின்றது. கொடநாடு கொலை கொள்ளை உட்பட பல வழக்குகள் இருக்கின்றன. அதில் எந்த நடவடிக்கையும் இல்லை. தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் இணைந்து செயல்படுகின்றன என்பது பொதுமக்கள் கருத்து.
சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற விதி மட்டும்தான் இருக்கிறது. துணைத்தலைவர் என்பது இல்லை. சபாநாயாகர் நினைத்தால் கொடுக்கலாம். அவர் வேண்டாம் என்று நினைத்தால் கொடுக்க தேவையில்லை. அது சபாநாயகரின் தனி அதிகாரம். அது சட்டமன்ற விதிகளில் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க ஆட்சியின் போது சில தவறுகள் உள்ளே நடந்திருக்கிறது. இப்போது ஆட்சியில் யார் இருக்கின்றனர். 100 நாட்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னார்கள். அதில் ஆறு கொலைகள் நடந்துள்ளது. சில அரசியல் ரகசியங்கள் உண்மையில் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியுமா?
நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், அதை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது? அந்த சேரில் போய் உட்காரலாமா? சின்னம்மாவிற்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கும் பொழுது தீர்மானம் எதுவும் போடவில்லை.
தி.மு.க ஆட்சி குறித்து தினந்தோறும் அறிக்கைகள் கொடுத்து வருகிறேன். புயல், வெள்ளம் வந்தால் அதில் சிறப்பாக செயல்படுவதில்லை, தோற்றுப் போய் இருக்கின்றனர் என்று சொல்லி இருக்கின்றேன். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி மேலே வரவே முடியாது. இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.