கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், “கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தி.மு.க அரசு தோல்வியை கண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து, அவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த துயரச் சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“