பெங்களூரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா பூரண குணமடைய வேண்டும் என துணைமுதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
நேற்றுடன், சிறைத் தண்டனையை முடித்த சசிகலா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் சில நாட்களில் வீடு திரும்புவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னதாக தெரிவித்தார் .
சசிகலாவின் தமிழக வருகை தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். மேலும், கட்சிக்குள் சசிகலாவுக்கான ஆதரவு பெருகாமல் இருக்க அதிமுக தலைமை முனைப்போடு உள்ளது.
நேற்று, சசிகலா விடுதலையை வரவேற்கும் விதமாக, அஇஅதிமுக – வை வழிநடத்த வருகைத் தரும் பொதுச் செயலாளர் சசிகலா வருக! வாழ்க! வெல்க! என போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி அக்கட்சியில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில், " பெங்களூரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா பூரண குணமடைந்து, இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மனநிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டார்.
மேலும், இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல; மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு எனவும் ஜெயபிரதீப் குறிப்பிட்டுள்ளார்.