'தர்மமே வெல்லும்'; ஓ.பி.எஸ் விமர்சனம் - அ.தி.மு.க தொடர்பான தீர்ப்பு குறித்து தலைவர்கள் கூறுவது என்ன?

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டது குறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
OPS, Pugazh, Shanmugam

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

மேலும், சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமையில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 

ஓ. பன்னீர்செல்வம் கருத்து:

இதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, "உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இருக்கிறது என மனு தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment
Advertisements

அந்த மனுவில், நீதிமன்றத்திற்கு இருக்கக் கூடிய அதிகாரங்கள், தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மமே வெல்லும் என இன்று நிரூபனம் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

புகழேந்தி கருத்து:

அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி கூறுகையில், "சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது என்றும், உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையமே விசாரிக்கலாம் என்றும் நாங்கள் வாதிட்டோம்.

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.

பழனிசாமி என்ற தீய சக்தியிடம் அந்த சின்னம் இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

கே.சி. பழனிசாமி கருத்து:

இதேபோல், கே.சி. பழனிசாமியும் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். "2017 முதல் 2024 வரை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகள் தான் வழங்கப்பட்டன. தற்போது தான் நீதியின் கண்கள் திறக்கப்பட்டுள்ளன. எங்களது நிலைப்பாடு ஆரம்ப காலத்தில் இருந்து ஒன்று மட்டும் தான். தொண்டர்களால் மட்டுமே தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனக் கூறி வருகிறோம். சமீப நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன" எனக் கூறினார்.

சி.வி சண்முகம் கருத்து:

இதனிடையே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார். அதன்படி, "அ.தி.மு.க-வில் இல்லாதவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை நாடினர். மனுதாரர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை அழைத்து விளக்கம் கேட்க ஆணையம் முடிவு செய்தது. 

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. 29A பிரிவு 9ன்படி, கட்சி அமைப்பு மாற்றங்களை ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். குமாஸ்தா வேலை மட்டும் தான் தேர்தல் ஆணையம் வசம் உள்ளது. இது குறித்த திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை பதிவு செய்வதே தேர்தல் ஆணையத்தின் பணி. ஆட்சேபனை இருந்தால், அது குறித்து விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டும் தான் உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்ட சூரியமூர்த்தி என்பவர் கட்சி உறுப்பினராக இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதியே தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி அ.தி.மு.க-வின் கருத்துகளை தெரிவித்தோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 2 தவறுகளை செய்தது. இதனை நீதிமன்றம் கண்டித்தது. உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை" எனக் குறிப்பிட்டார்.

Admk Election Commission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: