ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதன்படி, "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்ட திருத்தம், குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்த வழிவகுக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.
தி.மு.க-வை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், அதன் பிறகு வேறு பேச்சும் என்பது வாடிக்கையானது தான். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலில் குரக் கொடுத்தவர்கள் அ.தி.மு.க உரிமை மீட்பு குழுவினராகிய நாங்கள் தான்.
2026-ஆம் ஆண்டு தேர்தல் குறித்து முதல்வரின் நிலைப்பாடும், மக்களின் நிலைப்பாடும் வேறு விதமாக இருக்கிறது. தி.மு.க, மக்களை ஏமாற்றுவதாக அருமை நண்பர் விஜய்க்கு இப்போது தான் தெரிகிறதா? தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே எங்களுக்கு தெரிந்து விட்டது" எனக் கூறினார்.