தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் வெறும் கட்டுக்கதை என அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொடநாடு விவகாரம்:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம் சுமத்தினார்.
இது குறித்து கடந்த வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களை மேத்யூ சாமுவேல் சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட வீடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பதாகவும், வீடியோவை வெளியிட்ட மேத்யூ, அந்த வீடியோவில் பேட்டியளிக்கும் சயன்,மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், மனோஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய நேற்று முன் தினம் டெல்லி விரைந்தது.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு கைது செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தின் உண்மைநிலை என்னவென்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் சி.வி சண்முகம்:
கொடநாடு விவகாரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கில் தொடர்புடைய சயன் 2 ஆண்டுகள் எதுவும் பேசாமல் இருந்து விட்டு, தற்போது யாரோ எழுதிக் கொடுத்ததை பேசுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா கொலையை விசாரிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? எனவும் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:
மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு உள்ள செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் கொடநாடு போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். எப்போதுமே அதிமுக தோகைவிரித்தாடும் ஆண் மயில் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ செம்மலை:
கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சருக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு அதிமுகவின் நல்லாட்சியை முறியடிக்க நினைக்கும் திமுகவின் திட்டமிட்ட சதி.முதல்வர் குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பொய் செய்தி பரப்புவோர்களை அதிமுக வேடிக்கை பார்க்காது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். கொடநாடு கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் சந்திக்க தயார். இந்த ஆட்சியின் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை என்பதால், ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்கின்றார்கள்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி :
கோடநாடு கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின், சாதிக்பாட்சா உள்ளிட்டோர் கொலை வழக்கில் ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. கோடநாடு குறித்த கேள்வியை பங்களாவை பராமரிக்கும் சசிகலாவிடம்தான் ஸ்டாலின் கேட்க வேண்டும்.
ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது. முதல்வர் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.