ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லும் வகையில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு ரயில் இயக்கப்படும்,
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
Advertisment
இந்த விபத்தில் சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 230-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரயில்களும் தமிழகத்தின் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்வதால், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய அரசு சார்பில் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர ரயில் விபத்தைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒருநாள் அரசு துக்கம் அனுசரிப்பதாகவும், இன்றைய அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு, காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லும் வகையில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு ரயில் இயக்கப்படும், உறவினர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதவி சேவை மையத்தை தொடர்பு கொண்டு சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டோரில், கிட்டத்தட்ட 35 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மாநிலத்தில் இருந்து 85 பேர் காயமடைந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
(ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு உதவி எண்கள் அறிவித்துள்ளது.
விபத்து குறித்து பயணிகளின் குடும்பத்தினா், உறவினா்கள் தகவல் அறிய 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களிலும், 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“