/indian-express-tamil/media/media_files/zhwcTCi7LnclaZDfjHoG.jpg)
ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் சத்தியவாகீஸ்வரர்சிவன் கோயில் உள்ளது. இக்கோவில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலின் உப கோயிலாக உள்ளது.
இக்கோவிலானது சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில் பழமையான செப்புத்தகடு இருந்தது. இந்த தகடானது சுந்தர சோழனால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 1957 ஆம் ஆண்டு தொல்லியல் துறை குழுவினர் அன்பில் சத்தியவாகீஸ்வரர் சிவன் வழங்கப் கோவிலுக்கு வந்து செப்பேட்டை நேரில் பார்வையிட்டு படிமம் எடுத்துச் சென்றனர்.
அதன் பிறகு இந்தச் செப்பு தகடு மாயமானது. இதுவரை இந்த செப்பு தகடு எங்கே உள்ளது என எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காணாமல் போன இந்த செப்பேடுகளை பற்றி தகவல் தெரிந்தாலோ அல்லது செப்பு தகவலை வைத்திருந்தாரோ சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தெரிவித்திருந்தார். மேலும் செப்பேடுகள் பற்றிய தகவலை அறிவிக்கும்பொருட்டு அறிவிப்பு போஸ்டர்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லால்குடி சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஒட்டினர்.
இந்நிலையில் அன்பில் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் உப கோயிலாக உள்ளதால் இங்கு செப்பு பட்டயம் உள்ளதா கூடுதல் தகவல் ஏதேனும் கோவில் நிர்வாகத்திடம் உள்ளதா என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி சிவகுமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், திருச்சிக்கு வருகை தந்த அவர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் கோவிலில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கக்கூடிய சிலைகள் மற்றும் செப்பு பட்டயங்கள் குறித்து கோவில் இணை ஆணையரிடம் அது தொடர்பான விவரங்களை கேட்டு அறிந்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருவரங்கம் கோவிலில் எஸ்.பி.சிவக்குமார் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இங்கிருந்து அன்பில் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்களிடம் விசாரணை நடத்தினார். செப்பு தகட்டில் உள்ள தகவல் சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்து நான்காம் ஆண்டில் கிபி 961 ஆம் ஆண்டில் மந்திரிக்கு 10 வேலி நிலம் வழங்கியது பற்றியும், மாதவ பட்டர் முன்னோர்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றியும் செப்பு தகடில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் திருச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.