Advertisment

எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணியை டிச. 17-க்குள் முடிக்க உத்தரவு; தொழிற்சாலை சங்கங்கள் மீது பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணியை டிசம்பர் 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
oil spill

தொழிற்சாலை சங்கங்கள் மீது பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணியை டிசம்பர் 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள், எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தமிழக அரசு தரப்பில், கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணியை மேற்கொண்டது.

இந்த வழக்கில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், “கடலில் எண்ணெய் கலக்காமல் தடுப்பதற்காக 635 மீட்டருக்கு எண்ணெய் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவால் மீனவ கிராமங்களில் கரையோரம் பாதிக்கப்பட்டிருந்த 20 டன் மணல் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் கும்மிடிப்பூடியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல, கடல் மற்றும் ஆறுகளில் இருந்து 33 டேங்கர் லாரிகளில் ஒரு லாரிக்கு 220 லிட்டர் எண்ணெய் வீதம் 7 ஆயிரத்து 760 லிட்டர் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விளக்கத்தைக் கேட்ட பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள்,  “எண்ணெய் கழிவுகள் கலந்த சம்பவம் நடைபெற்று 13 நாட்கள் கடந்த பிறகும் மிகவும் குறைவான அளவில் மட்டுமே எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்பது மிகவும் கவலை அளிக்கிறது. கடலில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப் போகிறீர்கள், எவ்வளவு மீன்வளம் அழிந்துள்ளது, இதனால், எத்தனை கிராம மக்கள் பாதிக்கப்படுள்ளனர் என்ற தெளிவான விளக்கங்கள் விசாரணையில் தெரியவில்லை” என்று தெரிவித்தனர். 

இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், “எண்ணெய் கலந்துள்ள பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழு மற்றும் ஐ.ஐ.டி நிபுணர் குழு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் கழிவை அகற்ற டிசம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் தேவைப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சி.பி.சி.எல் நிறுவனம் தரப்பில்,  “எண்ணெய் கழிவை அகற்ற 2-வது ஸ்கிம்மர் பணியைத் தொடங்கியுள்ளோம். டிசம்பர் 17-ம் தேதிக்குள் 90 சதவிகித எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் தரப்பில், “தமிழ்நாடு அரசும், சி.பி.சி.எல் நிறுவனமும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மீனவர்கள் எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எண்ணெய் தடுப்பு மிதவைகள் சரியான இடங்களில் அமைக்கப்படவில்லை. உடனடியாக எண்ணெய் கழிவுகளை அகற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகள் தொடர்பான இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள், மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது என்று தெரிவித்தனர். மேலும், எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணியை டிசம்பர் 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் எண்ணெய் கழிவுகள் கலந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment