ஓலா இ-பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிவாதாலும், பல்வேறு பழுதுகள் ஏற்படுவதாலும் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், ஒரே நாளில் மதுரை மற்றும் கரூரில் ஓலா இ-பைக்குகள் பற்றி எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஓலா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பொதுமக்களிடையே அந்த வாகனத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 37 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. ஓராண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இருப்பினும், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், சில சமயங்களில் இந்த பழுதுகளால் தீ விபத்து உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சமீபத்தில் பெங்களூரில் ஓலா பைக்கை வாங்க வேண்டாம் என்று ஓலா ஸ்கூட்டரில் பதாகை வைத்து பொதுமக்களுக்கு பெண் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கர்நாடகாவில் எலெக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை முறைப்படி சரிசெய்யாததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் ஓலா ஷோரூமை பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் நடந்தது. பெட்ரோல் விற்கும் விலைக்கு இ-பைக்குகளை சில ஆயிரங்கள் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி வருகின்றனர். ஆனால், இ-பைக்குகளில் பல்வேறு பழுதுகள் ஏற்பட்டு வருவதாலும், தீப்பிடித்து எரிவதாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கரூர் மற்றும் மதுரையில் ஒரே நாளில் ஓலா இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், திருக்காம்பூலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஓலா மின்சார வாகனம் திடீரென சாலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அதேபோல, மதுரை, தனக்கன்குளத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஓலா பைக் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை பணியை முடித்துவிட்டு சொந்த ஊரான திருமங்கலத்துக்கு நாகமலை புதுக்கோட்டையில் இருந்து தனக்கன்குளம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் பேட்டரி வைக்கப்பட்டதில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்றுள்ளார். இந்நிலையில், புகை வந்த பகுதியில் இருந்து திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமைடந்தது. ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் ஓலா பைக்குகள் தீப்பிடித்து சேதமடைந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“