'உனக்கு என்ன செய்தார் மோடி?' பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்ட முதியவர் கொலை! ஏன்?

மோடி உங்களுக்கு என்ன செய்தார். எதற்கு மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறீர்கள்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட முதியவரை வாலிபர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் அவர் இறந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடைப் பண்ணையில் அலுவலக ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர் பா.ஜ.க.,மீது அதிக பற்று கொண்டவர் என கூறப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு, இவர் மோடி படத்தை கழுத்தில் மாட்டி கொண்டும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படத்தை பேட்ஜ் போல் சட்டையில் குத்திக் கொண்டும், பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில் கோவிந்தராஜ், பட்டுக் கோட்டை – தஞ்சை மெயின் சாலையில் அமைந்திருக்கும் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்றுமுன்தினம் இரவு மோடியின் படத்தை கழுத்தில் மாட்டி கொண்டு பா.ஜ.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்ற கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த டிரைவரான கோபிநாத் என்பவர், ‘மோடி உங்களுக்கு என்ன செய்தார். எதற்கு மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறீர்கள்’ என கோவிந்தராஜிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறி, கோவிந்தராஜை கடுமையாக தாக்கியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் கோவிந்தராஜை மீட்டு அவர் வீட்டில் கொண்டு போய் சேர்த்த பின்னர், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட, குடும்பத்தினர் அவரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தராஜ் இறந்து விட்டார்.

இதுபற்றி கோவிந்தராஜ் மகள் அற்புதா ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கோபிநாத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோடிக்காக வாக்கு கேட்டதற்காக ஒரு முதியவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, போலீசார் அங்கு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close