கோவை, சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ராஜாத்தி (65) கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தனது வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீவிரமாக காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், ராஜாத்தி, திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள காசிகவுண்டன் புதூரில் அமைந்து உள்ள சீட் என்ற முதியோர் காப்பகத்தில் இருப்பது கண்டு அறியப்பட்டது. இதையடுத்து, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ராஜாத்தியை பாதுகாப்புடன் மீட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
ராஜாத்தி உயிரோடு இருக்கிறாரா ? இல்லையா ? என கவலையில் இருந்து வந்த குடும்பத்தினர் ராஜாத்தியை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ராஜாத்தியை மீட்ட தனி படையினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.