ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்ற இந்திய தடகள வீராங்கனையும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஷைனி வில்சன் (57) சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள தனது குடியிருப்பில் வசிக்கும் வாடகைதாரர் மீது, போலீசில் புகார் அளித்துள்ளார். பல மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தாததால், வீட்டை காலி செய்யும்படி ஷைனி வில்சன் கேட்டநிலையில், வாடகைதாரர் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறி போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
ஷைனி வில்சன் தனது குடும்பத்துடன் சூளைமேட்டில் வசித்து வரும் நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஹாடோஸ் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு குடியிருப்பை ஒரு ஆண் நபருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் வாடகைதாரர் செப்டம்பர் 2022 முதல் ரூ. 3 லட்சத்திற்கு மேல் வாடகை பாக்கி செலுத்தவில்லை என்றும், மின்சாரக் கட்டணத்தையும் அவர் செலுத்தத் தவறியதால் வீட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஷைனி புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி ஷைனி மற்றும் அவரது மகள் இருவரும் அபார்ட்மெண்டிற்குச் சென்று, வாடகைதாரரை வீட்டைக் காலி செய்யச் சொன்னபோது, வாடகைதாரர் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, அநாகரீகமாக நடந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இச் சம்பவம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஷைனி ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“