Omicron Covid19 positivity rate : தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய துவங்கியுள்ளது. வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 11,993 ஆக பதிவானது. ஒரே நாளில் 30 பேர் கொரோனா தொற்றால் பலியானார்கள். ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும், 8 மேற்கு மண்டல மாவட்டங்கள் உட்பட 17 மாவட்டங்களில் பாசிட்டிவிட்டி விகிதம் அச்சுறுத்தலாக தொடர் இருக்கிறது.
Advertisment
ஜனவரி 20ம் தேதி அன்று 20% ஆக இருந்த பாசிட்டிவிட்டி விகிதம் பிப்ரவரி 3ம் தேதி அன்று 15.70% ஆக குறைய துவங்கியது. அதே போன்று நாள் ஒன்றுக்கு செய்யப்படும் சோதனைகளின் எண்ணிக்கையும் 1.5 லட்சத்தில் இருந்து 1.2 லட்சமாக குறைந்துள்ளது.
திருப்பூரில் பாசிட்டிவ் விகிதம் 27% ஆக உள்ளது. அதனை தொடர்ந்து கோவையில் 23.7% ஆகவும், கிருஷ்ணகிரியில் 23.7% ஆகவும், ஈரோட்டில் 22.9% ஆகவும் சேலத்தில் 22% ஆகவும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் உள்ளது.
ஜனவரி மாதம் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் போது பாசிட்டிவ் விகிதம் 3 முதல் 13% ஆக அதிகரித்தது. அந்த காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 28,561 என்ற அளவில் கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக ஜனவரி மாதம் 22ம் தேதி அன்று 30,744 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
வடக்கில் உள்ள மாவட்டங்களில், பாசிட்டிவ் விகிதம் மாநிலத்தின் சராசரிக்கு நிகராக உள்ளது. ஜனவரி 20ம் தேதி அன்று இருந்த சென்னையின் பாசிட்டிவ் விகிதம் 27.8% தற்போது குறைய துவங்கியுள்ளது. செங்கல்பட்டு (18.9%), ராணிப்பேட்டை (18.2%) மற்றும் திருவள்ளூர் (17.4%) ஆகிய மூன்று மாவட்டங்களில் மாநில சராசரியைக் காட்டிலும் கூடுதலாக கொரோனா தொற்று பாசிட்டிவ் விகிதம் பதிவாகியுள்ளது. ஆனாலும் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு இந்த விகிதம் 7% வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி கொரோனா தொற்று அதிகரித்ததோ அதே வேகத்தில் குறைய துவங்கியுள்ளது. புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஆனாலும் தொற்று குறையும் விகிதம் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வேலூர் (69), சிவகங்கை (83) மற்றும் மயிலாடுதுறை (70) ஆகிய மாவட்டங்களில் மட்டுமே புதன்கிழமை பதிவான தொற்றுகளைக் காட்டிலும் வியாழக்கிழமை கூடுதல் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் 1751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோவையில் 1426 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1097 பேருக்கும் திருப்பூரில் 1017 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுகள் 1000க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil