Tamil Nadu News Today : Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 85-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update:
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு. அதன் விவரம்!
*வரும் பிப், 1 முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் பல்கலை,. இயங்க அனுமதி
*வரும் 30-ம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை.
*இன்று (ஜன;28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது.
*இன்று முதல் முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்ளுக்கு அனுமதி.
*கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள்
வேட்புமனு தாக்கல்: தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
Tamil Nadu News LIVE Updates
Corona Update: கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் 33.89 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,844 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்;
- அமெரிக்கா – 4.46 லட்சம்
- பிரான்ஸ் – 3.92 லட்சம்
- இந்தியா – 2.48 லட்சம்
- ஜெர்மனி – 1.89 லட்சம்
- இத்தாலி – 1.55 லட்சம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
தமிழகத்தில் மேலும் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு நேற்று 28,515ஆக இருந்த நிலையில் 26,533ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 37,460 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
பொதுதரவரிசை எண் 1 முதல் 10,456 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் வரும் 30ம் தேதி முதல் பிப். 3ம் தேதி வரை கலந்தாய்வுக்கான கட்டணம், விரும்பும் கல்லூரிகளை ஆன்லைனில் பதிவிட மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டம் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், 8 மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தும் முறையான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் எம்.பி. விடுவிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அறிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 54,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30,225 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர்.
பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்: “கூட்டணி குறித்து முடிவெடுக்க அண்ணாமலைக்கு முழு அதிகாரம். தனித்து போட்டியிட இப்போதைக்கு அவசியம் ஏற்படவில்லை, கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார்” என்று கூறினார்.
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவியின் பெற்றோர், வீடியோ எடுத்த முத்துவேல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ள தமிழக அரசு, தரப்பு விடுதியில் பூச்சிமருந்து எப்படி வந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலம் மாணவியின் பெற்றோர் தரப்பு சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரைக்கிளை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வியூகம், கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிலர் அரசியலாக்க முயற்சி செய்கின்றனர். நீதியை விரும்பினால் வீடியோவை எடுத்த அன்றே வெளியிட்டிருக்கலாமே? மாணவி உயிரிழந்த பின்பு வீடியோவை பரப்புவதற்கு என்ன காரணம்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வில் 710 முதல் 410 வரையிலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்
நகர்ப்புற தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும் சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும் தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசுவதாக பாஜகவினர் மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு, ஹெச்.ராஜா ஆகியோர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிப். 12 முதல் 15 வரை 4 நாட்கள் நடைபெறும் 14 பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியள்ளது.
பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜியிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 76.71 புள்ளிகள் சரிந்து 57,200.23 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8.20 புள்ளிகள் அதிகரித்து 17,101.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
பீகார் மாநிலம் கயாவில், இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி கோவிலில் இறை பணி செய்து வந்த யானைகளுக்கு 5.48 ஏக்கரில், நடைபயிற்சியுடன் கூடிய குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய 2 யானைகள் குளியல் தொட்டியில் இறங்கி குளித்ததைக் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம், பண்ணாரி – திம்மம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரவு நேரங்களில் வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து சத்தியமங்கலம் புலிகள் சரணாலய கள இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு வழங்குகிறது இந்தியா. இது தொடர்பாக இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே 375 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் கையெழுத்தானது
“60 வயதிற்கு மேற்பட்டவர்கள், பியுசி முடித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடமில்லை. சட்டப்படி சிவப்பிரகாசம் மருத்துவப்படிப்பில் சேர முடியாது” என மருத்துவ கலந்தாய்வு செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி கரியப்பா மைதானத்தில் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பைக் கண்டுகளித்த பிரதமர் சிறந்த மாணவருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.அப்போது பேசிய அவர், “நானும் என்.சி.சி. உறுப்பினர் என்பதில் பெருமைபடுகிறேன். என்.சி.சி பயிற்சியின் போது நான் கற்றுக்கொண்ட கொள்கைகள் பிரதமாராக எனது பணியை சிறப்பாக செய்ய மிகவும் உதவிகரமாக இருந்தது. தேசிய கல்விக் கொள்கை 2020ல் 90 பல்கலைக்கழகங்களில் என்.சி.சி.யை ஒரு பாடமாக தேர்ந்தெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லைப்பகுதிகளில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட புதிய என்.சி.சி கேடட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதப் படைகளில் பெண்களுக்கு அதிகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. தேசத்தை முதன்மைப்படுத்தி இளைஞர்கள் முன்னேற தொடங்கும் நாட்டை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
போதைப் பழக்கத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேரணி நடத்துமாறும் அனைத்து என்.சி.சி நண்பர்களும் தங்கள் நகரம், மாவட்டங்களில் குழுக்களை உருவாக்கவேண்டும்” என்று மாணவர்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.
நெல்லை தச்சநல்லூர் அருகே சைமன் என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து. 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.
இந்நிலையில், சவுந்தரியா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் இத்தாலியின் பிரிட்டனியை வீழ்த்தி 6வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். “அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துவிட்டு தற்போது காலி செய்யச் சொல்வது ஏற்புடையதல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோரே தங்களின் செல்போனில் மின்கட்டணம் கணக்கிடும் புதிய முறையை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நடைமுறை பிப்.1-ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்கவும், செயலியின் சாதக, பாதகங்களை ஆராயவும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காணொலி காட்சி மூலம் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், வாளையாறு மனோஜ் தனக்கு வழங்கபட்டுள்ள நிபந்தனை ஜாமினை தளர்த்த கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கனகராஜின் சகோதரர் தனபால் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு மாலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி, குடியரசு தின என்சிசி முகாம் நிறைவையொட்டி தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் என்.சி.சி. படையினரின் அணிவகுப்பை ஏற்றார் பிரதமர் மோடி.
பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். சீன எல்லை விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, கொரோனா இழப்பீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து குடியிருப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தற்போது அதனை காலி செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதற்கு கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டுவதா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இனி மெட்ரோ சேவை வழக்கம் போல் இயங்கும் என்றும் 5 முதல் 10 நிமிட கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதித்ததால் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எடுத்து அவர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பி ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 24 மணி நேரத்தில் புதுவையில் 1271 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,293 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்.பி.செல்வம் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக – காங்கிரஸ் கட்சியினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் கேட்ட இடங்களை தர பரிசீலிப்பதாக திமுக உறுதி அளித்துள்ளது என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசு ஊரடங்கை ரத்து செய்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் வார நாட்களில் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது அமைதியை குலைக்க பொய்யான தகவலை பரப்பியதாக, தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் மனோஜ் செல்வம் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள், மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்து அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், துரைமுருகன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று முதல் பிப்.4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, ஜனவரி 31 பிப்.9 மற்றும் பிப். 18 முறையே 3 கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிப்.1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் 1, 3 மற்றும் 5வது செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைனில் நடைபெறும். ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில்’ செய்முறை தேர்வுக்காக மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.