Omicron Variant Chennai test positive rate : தலைநகர் சென்னையில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு தொற்று பாசிடிவ் விகிதம் 1% ஆக இருந்த நிலையில் தற்போது அந்த விகிதம் 9.6% ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் தொற்றுக்கு முன்பு, டிசம்பர் 28ம் தேதி டி.பி..ஆர் எனப்படும் டெஸ்ட் பாசிடிவ் விகிதம் வெறும் 1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 19,869 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் வெறும் 194 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது அந்நாளில் உறுதி செய்யப்பட்டது. இரண்டாம் அலைக்கு பிறகு இந்த விகிதம் வெறும் 0.5% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சூழல் முற்றிலுமாக மாறிவிட்டது. சென்னையில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது என்பதை இது காட்டுகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அனைத்து பரிசோதனை மாதிரிகளையும் மரபணு பகுப்பாய்விற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் மரபணு ஆய்வை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒமிக்ரான்: வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் வழிகாட்டுதல்களில் இந்தியா மாற்றம் செய்தது ஏன்?
வியாழக்கிழமை அன்று அரசு வெளியிட்ட பட்டியலில் சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. தற்போது தலைநகரில் 11,494 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை இரண்டே நாட்களில் இரண்டு மடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் ஆக்ஸிஜன் செறிவு குறித்த சோதனையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு… யாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தேவை? அரசு விளக்கம்
டெல்டா மாறுபாடு அதிக தாக்கத்தை கொடுத்தாலும் கூட ஒரே நாளில் 10 ஆயிரம் தொற்றுகள் அதிகரிக்கவில்லை. ஆனால் இரண்டு மடங்கு தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விரைவில் உச்சம் பெற்று ஒமிக்ரான் தொற்று பரவல் குறைய துவங்கும் என்றும் வைராலஜிஸ்ட் மருத்துவர் டி. ஜேக்கப் ஜான் கூறியுள்ளார். பிப்ரவரி மத்திய வாரங்களில் இதன் தொற்று மிகவும் தீவிரமாக இருக்கும். மார்ச் மத்திய வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒமிக்ரான் தொற்று பரவல் குறைய துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை அன்று 1671 தெருக்களில் மொத்தமாக 5542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று 1388 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த 1671 தெருக்களில் 1390 தெருக்களில் மூன்றுக்கும் குறைவான பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது. 76 தெருக்களில் 5க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தேனாம்பேட்டையில் உள்ள 295 தெருக்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளனர். 295 தெருக்களில் 220 தெருக்களில் மூன்றுக்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 702 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil