Omicron virus in Tamil Nadu : நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக இந்தியா திரும்பிய 47 வயது மதிக்கத்தக்க சென்னைவாசி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வில் எஸ் ஜீன் வீழ்ச்சியை கொண்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 உறவினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அனைவரும் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் இல்லை என்றும், ஆனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எஸ் ஜீன் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேற்படி சோதனைகளுக்காக அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்விற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என்பதை பெங்களூரில் அமைந்திருக்கும் இன்ஸ்டெம் ஆய்வக முடிவுகளே உறுதி செய்யும். அவ்வாறு உறுதி செய்யப்பட்டால் தமிழகத்தின் முதல் ஒமிக்ரான் வழக்கு இதுவாகும் என்று கூறியுள்ளார் அமைச்சர்.
நைஜீரியாவில் இருந்து திரும்பிய நபருக்கு வழக்கமான பரிசோதனை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அபாயமற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2% பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ள அபாயமிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஐ.எம்.சி.ஆர். வழிகாட்டுதல்களின் படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வரை அபாயமிக்க நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 11,459 பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதர நாடுகளில் இருந்து 1,699 நபர்கள் வந்துள்ளனர். இவர்களில் 37 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்று அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் அறிவிப்படும் வரை விமான நிலையத்தில் இருந்து வெளியேற இயலாது. அதே நேரத்தில் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மாதிரிகள் பெறப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
நைஜீரியாவில் இருந்து வந்தவரிடம் மாதிரிகளை பெற்றுவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். சோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தது. அதனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் அனைவருக்கும் சோதனை முடிவுகள் நெகடிவாக வந்தன. அதன் பிறகு அவர்களுக்கு லேசான அறிகுறிகள் தென்பட இரண்டாவது முறையாக மீண்டும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் பேசிய மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் விமான நிலைய சுகாதாரத்துறை குழுவினருடன் இணைந்து அந்த விமானத்தில் பயணித்த இதர பயணிகளுக்கு விபரத்தை தெரிவிப்போம். ஏற்கனவே பயணிகளிடம், ஏதேனும் தொற்று அறிகுறிகள் தெரிந்தால் உடனே சுகாதாரத்துறையை அணுக வேண்டும் என்று வழிகாட்டியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
நம்முடைய கையில் இருக்கும் கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் தடுப்பூசி மற்றும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுதல். அனைத்து வயது வந்தோரும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கின்றோம். அதே நேரத்தில் 5 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் டி.எஸ். செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil