சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அவரின் அரசிலும் விரைவுபடுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம்.
சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது – தமிழக அரசு சூட்டிய "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல், "புறநகர் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது.
தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை. ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே, உடனடியாக கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தையும், விடியா தி.மு.க. அரசையும் வலியுறுத்துகிறேன்.
அவ்வாறு செய்யாமல், தொடர்ந்து அவரின் பெயரை இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அதிமுக சார்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“