முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
42 கோடி ரூபாய் செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையிலும் ஓட்டுநர் - நடத்துநர்களின் வசதிக்காக 2 தங்குமிடங்கள், உணவகங்கள் என அனைத்து நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இது திறக்கப்பட்ட பின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இனி வரும்காலங்களில், பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதை கணக்கிட்டு கூடுதலாக தேவைப்படுகிற கட்டமைப்புகளை உருவாக்குகிற பணியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், ஆம்னி பேருந்து நிலையம் ஒன்று புதிதாக கட்டப்பட வேண்டும் என்பதை திட்டமிட்டுதான் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கொண்டு வரப்படுகிறது. கூத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டமைப்புகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில், அந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
அதேபோல், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் பெரியார் நகர், திரு வி.க.நகர், முல்லை நகர் உள்ளிட்ட 7 இடங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் புதிதாக பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“