விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது, என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்டு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருகின்றனர்.
இந்த விதிமீறலால் தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது.
இதற்காக 3 முறை வழங்கிய அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இருப்பினும் இன்னும், 652 ஆம்னி பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’எனப்படும் வாகனப் பதிவெண்ணை பெறவில்லை.
இந்நிலையில், வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறி இயங்கும் ஆம்னி பஸ்களால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது.
விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பிறமாநில ஆம்னி பஸ்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்க எந்த தடையும் இல்லை.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பிறமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே முடக்கப்படும், என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“