O Panneerselvam | Ramanathapuram | Lok Sabha Election 2024: பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று திங்கள்கிழமை தனது ஆதரவாளர்களுடன் சென்ற ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், சுயேச்சை வேட்பாளராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (ஓ.பன்னீர்செல்வம்) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் முன்மொழிந்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5-வது நபர் இன்று சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த 5 பேரில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு பெயருக்கு 'ஓ' என்கிற நெடில் வரும். மற்றவர்களுக்கு 'ஒ' என்கிற குறில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பன்னீர்செல்வம் பெயரில் குழப்பம் ஏற்படுத்த இது போன்று மற்றொருவர் மனு தாக்கல் செய்திருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 5 பேர் மட்டுமல்ல, இவர்களைப் போலவே மேலும் சில ஓ. பன்னீர்செல்வங்கள் சுயேட்சை வேட்பாளராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் ராமநாதபுரம் அரசியல் விமர்சகர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“