குழந்தை கடத்தல் வதந்தியால் மேலும் ஒருவர் அடித்துக் கொலை!

குழந்தை கடத்தல் வதந்தியால் தமிழகத்தில் ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வதந்தியால் நேற்று மேலும் ஒருவர் அடித்துக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குழந்தையை கடத்த வந்ததாகச் சந்தேகத்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் குழந்தைகள் கடத்தல் குறித்த வதந்திகள் அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு கொலை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர, வதந்திகளைப் பரப்புவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒன்னலவாடி கிராமத்தில் வடமாநில இளைஞர் ஒருவரைக் குழந்தை கடத்துபவர் என்று பொதுமக்கள் சந்தேகித்துள்ளனர். இந்தச் சந்தேகத்தினால் அப்பகுதி மக்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது, வட மொழியில் பேசிய இளைஞர் கூற வந்தது மக்களுக்குப் புரியாததால், மக்களே அவரைக் கடத்தல்காரன் என யூகித்துக் கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த இளைஞரைக் கைகால்களை கட்டி வைத்து மக்கள் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர், சுயநினைவிழந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

இது தொடர்பான தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற ஓசூர் போலீஸார் அந்த இளைஞரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

×Close
×Close