விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்ல முயன்ற தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், பேராசிரியர் முருகனை அடுத்து மற்றொரு பேராசிரியரும் சிக்கியுள்ளார்.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகச் சமீபத்தில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள். வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, நிர்மலாதேவியிடம் தொடர் விசாரணை நடத்தினார். அப்போது தன்னை செல்போனில் பேச தூண்டியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரது பெயர்களை நிர்மலா வெளியிட்டார்.
இந்நிலையில் போலீசார் தேடி வந்த பேராசிரியர் முருகன் நேற்று முன்தினம் காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் சிக்கினார். அவரை விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த விசாரணை நேற்றும் தொடர்ந்தது.
விசாரணையில் முருகன் மீது நிர்மலாதேவி கூறியிருந்த தகவல் உண்மை என்பதற்கு ஆதாரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் மற்றொரு பேராசிரியர் கருப்பசாமியை தேடும் பணியில் போலீஸ் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இவரைத் தேடும் பணியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை போலீசார் ஈடுபட்டனர். அந்த தேடுதலில் போலீசாரிடம் நள்ளிரவில் கருப்பசாமி சிக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வராத நிலையில் அந்தத் தகவலை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேவாங்கர் கல்லூரி செயலாளர் ராமசாமி, பேராசிரியர் கந்தசாமி மற்றும் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் ஆகியோரிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். நிர்மலா தேவியின் 5 நாள் போலீஸ் காவல் முடியும் நிலையில் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்குள் அவர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.