சிறப்புத் திட்டத்தில் உணவுப்பொருட்கள்: ரேஷன் கார்டில் கட்டாயம் இதைச் செய்யுங்க!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் அரசின் வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ஆம் கொண்டு வந்தபோது ரேஷன் ஆதார் இணைப்பு கட்டாயம் என கூறப்பட்டது. அதன்படி, குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் அரசின் வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “

”தொழில் நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ மாநிலம் விட்டு பிற மாநிலம் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற இந்திய அரசின் திட்டம் தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்ட பயனாளி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டை அல்லது அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அட்டையை இங்கு கொண்டுவர வேண்டும் என்று அவசியம் இல்லை.

பொருள்கள் வழங்கும் முன்னர் பயனாளியின் ஆதார் அட்டை எண், கைரேகைப் பதிவுகள் சரிபார்த்த பின், எந்த நியாயவிலைக் கடையிலிருந்தும் உணவு தானியங்களாகிய அரிசி, கோதுமையை மட்டும் நிா்ணயிக்கப்பட்ட அளவில் பெற்றுக்கொள்ளலாம்.

பயனாளி தான் வசிக்கும் மாநிலத்தில் அரிசி அல்லது கோதுமை இலவசமாகவோ அல்லது மிக குறைந்த விலையிலோ வழங்கப்பட்டாலும், இந்த திட்டத்தைப் பயன்படுத்தும் பயனாளி இந்திய அரசு நிா்ணயித்தப்படி, அரிசி ஒரு கிலோ ரூ. 3, கோதுமை ஒரு கிலோ ரூ. 2 க்கு விலை கொடுத்து பெற வேண்டும்.

ஒரு பயனாளியின் குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த உரிம அளவைத் தாண்டாமல் பல தவணைகளில் ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியும், வேறொரு மாநிலத்தில் மற்றொரு பகுதியும் உணவுப் பொருள்களை அந்தப் பயனாளி பெற இயலும்.

அல்லது ஒரே தவணையில் மொத்த உரிம அளவும் உணவுப் பொருள்களையும் அவர் பெற இயலும். இந்த திட்டத்தில் அரிசி, கோதுமையைத் தவிர கூட்டுறவு அங்காடியில் விற்பனை செய்யும் இதர வெளிசந்தை பொருள்களையும் உரிய விலையில் பயனாளி பெற்றுக் கொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: One nation and one ration card guidelines issued for migrant workers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com