ச.செல்வராஜ்
ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடு குறித்து #ietamil Exclusive பேட்டிகளை பெற்றது. அதில் இபிஎஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார், திருநாவுக்கரசர்.
ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடுகள் சாதனையா, வேதனையா? என விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி 16-ம் தேதி தமிழ்நாடு முதல் அமைச்சராக எடப்பாடி க.பழனிசாமி பொறுப்பேற்றார். ஒராண்டை அவரது ஆட்சி கடந்ததே ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. காரணம் அதிமுக.வுக்கு உள்ளேயும் வெளியேயும் அவ்வளவு பிரச்னைகள்!
ஓராண்டு இபிஎஸ் அரசு செயல்பாடுகள் குறித்து இங்கு விமர்சிக்கிறார், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் சு.திருநாவுக்கரசர். ‘செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆளுமையுடன் கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சி உடைந்தது. கட்சியிலும் ஆட்சியிலும் கோஷ்டி பூசல், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் இடையே கோஷ்டிகள், குழுக்கள் என அந்தப் பிரச்னையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக முதல்வர் இல்லாததால் மத்திய அரசுக்கு பயந்து நடக்கும் ஆட்சியாக இது இருக்கிறது. ஜெயலலிதா கடைசி வரை நீட், ஜி.எஸ்.டி., பாஜக.வுடன் கூட்டுறவு ஆகியவற்றில் ஒத்துப் போகாமல் தனித்து செயல்பட்டார். ஆனால் இப்போது நீட், ஜி.எஸ்.டி. தொடங்கி, அனைத்துப் பிரச்னைகளிலும் மத்திய அரசின் கைப்பாவையாக இந்த அரசு செயல்படுகிறது.
தமிழகத்தின் வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்புகளுக்காக தொண்ணூறாயிரம் கோடி ரூபாய் கேட்டதற்கு, சரியாக ஒதுக்கீடு செய்யவில்லை. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு குரல் கொடுக்கவும் இல்லை. ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. காவிரி பிரச்னையில் நீதி பெற்றுக் கொடுக்க மத்திய அரசு தயாரில்லை. இந்த அரசால் வற்புறுத்த முடியவில்லை.
டெல்டா மற்றும் இதர மாவட்டங்களின் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். 100 நாள் வேலைத் திட்டம் முறையாக நடக்கவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 90 லட்சம் இளைஞர்களுக்கு பதில் இல்லை. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் இன்னும் தொல்லை நீடிக்கிறது. இலங்கையால் கைப்பற்றப்பட்ட படகுகளைக்கூட மீட்க முடியவில்லை.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை. உயர் கல்வித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை.’ என்றார் திருநாவுக்கரசர்.
‘பாராட்டக்கூடிய அம்சம் எதுவும் இல்லையா? என அவரிடம் கேட்டோம். அதற்கு திருநாவுக்கரசர், ‘அப்படி குறிப்பிட்டு சொல்ல தேடித் தேடி பார்க்கிறேன். எதுவும் இல்லை. இந்த அரசுக்கு ஃபெயில் மார்க்தான் கொடுக்க முடியும்’ என்றார் திருநாவுக்கரசர்.