Advertisment

பெரியகுடி ஓ.என்.ஜி.சி கிணறு மூடாததால் எரிவாயு கசிவு; பேராபத்துக்கு முன் மூட வேண்டும்: பி. ஆர்.பாண்டியன்

2022-ம் ஆண்டு இந்த கிணறை செயல்பாட்டுக்கு கொண்டு வர மறைமுக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை அறிந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2022 சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தோம். 

author-image
WebDesk
New Update
ONGC 1.jpg

மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் எரிவாயு கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு வெளியேறுவதை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்ட பின் செய்தியார்களிடம் பேசுகையில், "காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய வகையில் மன்னார்குடி அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியகுடி எரிவாயு கிணறு கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி பணி நிறைவுபெறும் தருவாயில் எரிவாயு கட்டுக்கடங்காமல் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது

Advertisment

இதுகுறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகள் இந்தியாவிலேயே எந்த ஒரு இடத்திலும் இல்லாத அடர்த்தியில் இங்கே ஹைட்ரோ கார்பன் எரிவாயு நிரம்ப இருப்பதாகவும், அதை வெளி கொண்டு வருவதற்கு இயலாத நிலையில் வெடித்து சிதறி விட்டதாகவும், இதனை தற்காலிகமாக மூடி விடுவதாகவும், விரைந்து நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

இதனை அறிந்த அன்றைய மாவட்ட ஆட்சியர் நடராஜன் நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிட்டார். அதன் பிறகு 2022-ம் ஆண்டு இந்த கிணறை செயல்பாட்டுக்கு கொண்டு வர மறைமுக நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்பட்டன.  இதனை அறிந்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2022 சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தோம். 

ONGC 11.jpg

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழ்நாடு அரசு அன்றைய தலைமைச் செயலாளர் இறையன்பு உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிணறு மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அதற்கான சமாதான கூட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அக்கூட்டத்தில் பங்கு கொண்டு அதற்கான உத்தரவாதத்தை பெற்று போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். 

அதனை ஏற்று அன்றைய மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்ட் 13-ம் தேதி கூட்டப்பட்ட சமாதான கூட்டத்தில் ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் சாய் பிரசாத் இந்த கிணறை மூடுவதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும், அப்படி மூடாவிட்டால் பேராபத்து ஏற்படும் என்பதை உணர்ந்துள்ளதாகவும் அதற்கான வகையில் 2023 ஜனவரி துவங்கி ஜூன் மாதத்திற்குள்ளாக மூடுவதற்கான கால அவகாசத்தோடு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.   

ONGC.jpg

அதன் அடிப்படையில் அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த 'கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறத் தொடங்கி இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். 

குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை கொள்கை ரீதியாக தி.மு.க அரசு ஏற்றுக்கொள்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை முதலமைச்சர் வெளியிடாமல் வைத்திருப்பதின் மர்மம் என்ன? அக்குழு இத்திட்டம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு என்ன முன்மொழிந்திருக்கிறது? என்பதை உடனடியாக விவசாயிகளுக்கு வெளிப்படையாக

வெளியிட முன்வர வேண்டும். 

இல்லையேல் காவிரி டெல்டாவை மீண்டும் கார்ப்பரேட்டுகளிடம் பேரழிவு திட்டங்களுக்கு அனுமதிக்க போகிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் கொடுத்த அடிப்படையில் மூட முன்வர வேண்டும், மறுப்பார்களேயானால் தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் எம். செந்தில்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் முகேஷ், கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் எஸ்.வி.கே சேகர், உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனர்.  

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment