ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான மற்றும் தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31க்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக் கூடாது என தடை விதித்தும் உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. அதில், பிற மாநிலத்தில் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்தவே மத்திய அரசு விதிகளை வகுக்க உள்ளதாகவும், தனி நீதிபதியின் உத்தரவால் ஆன்லைன் மருந்து நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் இணைய தளங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்த கொண்டு வரப்படும் வரைவு விதிகளை மீறும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வரைவு விதிகள் ஜனவரி இறுதிக்குள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இதையடுத்து, ஆன் லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இன்றுடன் முடிவடைவதால், ஆன் லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை ஆன் லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தங்கள் விற்பனையை தொடரலாம் என்பது தெளிவாகிறது.