/indian-express-tamil/media/media_files/2025/09/26/tenkasi-2025-09-26-07-46-04.jpeg)
Tenkasi
தென்காசி: தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்த 48 வயதான வசந்தா, கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் கிருஷ்ணசாமி உளவுத்துறை அதிகாரியாக இருக்கிறார்.
கடந்த 24-ஆம் தேதி, மதியம் சுமார் 3.30 மணியளவில், வசந்தா தனது ஸ்கூட்டியில் கோவில்பட்டி - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் மைப்பாறை பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறிக்க முயற்சித்தார். வசந்தா கொள்ளையனுடன் போராடியதால் கீழே விழுந்தார், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றான்.
உடனடியாக வசந்தா தனது கணவருக்கும், அந்த வழியாக வந்தவர்களுக்கும் இந்தத் தகவலைத் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார், நெடுஞ்சாலையில் இருந்த அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார்படுத்தி தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். சில நிமிடங்களில், கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த 32 வயதான பாண்டித்துரையை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், பாண்டித்துரை எம்.எஸ்.சி., பி.எட் படித்துவிட்டு, கோவில்பட்டி ராஜீவ் நகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுவந்த அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கி சுமார் 10 லட்சம் ரூபாய் இழந்திருக்கிறார்.
விளையாட்டுக்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து, வட்டிக்குக் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறினால், அவரது மனைவி குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மிகுந்த விரக்தியில் இருந்த அவர், பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து, கடன் சுமையைச் சமாளிக்க குற்றச் செயலில் ஈடுபட முடிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தத் தகவல்களை அடுத்து, பாண்டித்துரையை கைது செய்த திருவேங்கடம் போலீசார், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.