ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் கடனாளியாகி ஏற்பட்ட மன உளைச்சல் காரணாமாக 20-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பணம் பறிக்கும் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்டோபர் 1-ம் தேதி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் 3-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களைத் தடை செய்து இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதற்கான மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டப்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் குறித்து ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறி விளம்பரங்களை வெளியிடும் நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அக்டோபர்19-ம் தேதி இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட ஆப்களை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட ஆப்களை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா தொடர்பாக, ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”