ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 20ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து, 2 மணி நேரம் உரையாற்றினார்.
அடுத்த நாளில் வேளாண்துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கூடிய சட்டப்பேரையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா முதலைமைச்சர் மீண்டும் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா தொடர்பாக ஸ்டாலின் பேசியதாவது ” நான் கனத்த இதயத்தோடு இங்கு நின்று கொண்டிருக்கிறேன். ’என் மரணம்தான் கடைசியாக இருக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்திவிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுவரை 41 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த மரணங்களை தடுக்கும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. இந்த அவல நிலையை உணர்ந்துதான் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழுவை அமைத்தோம் .
இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் .மனசாட்சியை உறங்க வைத்துவிட்டு எங்களால் ஆட்சி செய்ய முடியாது. இனி ஒரு உயிர் பறிக்கப்படாமல் இருக்க, இனி ஒரு குடும்பம் நடுத்தெருவில் வராமல் இருக்க இந்த மசோதாவை அனைவரும் நிறைவேற்றி தர வேண்டும்” என்று அவர் கூறினார்.