scorecardresearch

தனி செயலி.. இனி ஆவின் பொருட்கள் ஆன்லைனில் வாங்கலாம்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

ஆவின் பால் மற்றும் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யும் வகையில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

Minister Nasar
Minister Nasar

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்ரல் 5) வேளாண்மை, உழவர் நலத் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் பால் உற்பத்தியை மேம்படுத்த வங்கிகள் மூலம் 2 லட்சம் பசுக்கள் வாங்குவது, ஆவின் பால் மற்றும் அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்வது உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆவின் பொருட்கள் ஆன்லைன் விற்பனை முதற்கட்டமாக சென்னை மற்றும் சில நகரங்களில் செயல்படுத்தப்படும். ஆவின் பொருட்கள் வீடுகளுக்குகே வந்து டெலிவரி செய்யப்படும். இதற்காக தனி செயலி, இணையதளம் உருவாக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும், ஆவின் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் போனஸ் புள்ளிகள் வழங்கப்படும். மேலும் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு
பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால்பண்ணைகளுக்கு மாடுகள் வாங்கப்படும். ஆவின் பால் பாக்கெட்டுகள் தயாரிக்க ரூ.30 கோடியில் தானியங்கி இயந்திரம் நிறுவப்படும். இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணை சம்மேளனத்தின் உதவியுடன் பால் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும். மாதாந்திர பால் அட்டை வழங்குவது மற்றும் புதுப்பிக்கும் பணிகளும் கணினிமயமாக்கப்படும்.

மேலும், புதிய பால் வகைகள் அறிமுகப்படுத்தப்படும். ஆவின் சாக்லேட்டுகளின் தேவை அதிகமாக இருப்பதால், அம்பத்தூர் பால்பண்ணையில் சாக்லேட் தயாரிப்பு பிரிவு தொடங்கப்படும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Online sales of aavin milk products to be introduced