கோவையில், முதியவரிடமிருந்து ரூ. 1 கோடியே 65 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றியவர் யுவராஜ் (71). இவர் ஓய்வு பெற்ற பின்னர் கோவை, தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் பெயரில் லிங்க் வந்து உள்ளது.
அதில் பேசிய நபர்கள், ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய யுவராஜ், அந்த நிறுவனம் கூறிய படி பல்வேறு தவணைகளில் ரூ.1,00,65,000-ஐ முதலீடு செய்து உள்ளார். ஆனால், அவர்கள் கூறியதை போன்று தனக்கு லாபம் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை யுவராஜ் அறிந்து கொண்டார்.
தனது பணத்தை திரும்பப் பெற யுவராஜ் முயன்ற போது, அவருடனான தொடர்பை மோசடி கும்பல் துண்டித்து விட்டனர். இச்சம்பவம் குறித்து, போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட ஓசூர் பகுதியைச் சேர்ந்த மாதப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.