இணைய வழி சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது. சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு ஆளுநர் நேற்று முன்தினம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விகிதாச்சாரக் கோட்பாட்டின்படி, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முழுமையான தடை எதுவும் முன்மொழியப்படவில்லை. விளையாட்டுகள் முற்றிலும் தடை செய்யப்படவில்லை. வாய்ப்பு விளையாட்டு மற்றும் திறமை விளையாட்டு என வேறுபடுத்தப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது விகிதாசாரக் கட்டுப்பாடு” என அவர் தெளிவுபடுத்தினார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “வியாழன் காலை ஆளுநரிடம் இருந்து மசோதா குறித்து சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் விளக்கங்களுக்கு பதில் தயார் செய்து சமர்ப்பித்தோம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
முந்தைய அ.தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புதிய சட்டம் கொண்டு வர நீதிமன்றம் அனுமதி அளித்தது. உயர் நீதிமன்றம் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்ந்து, மேலும் சில ஷரத்துகளையும் சேர்த்து மசோதாவை ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம்.
ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான பிரச்சினையை ஆளுநர் எழுப்பினார். குறிப்பாக, வாய்ப்பு மற்றும் திறமை என்ற வேறுபாடு இல்லாமல் முழுமையான தடை என்பது அரசியலமைப்பின் 19(1)(ஜி) பிரிவுக்கு எதிரானது” என்று விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு, “தற்போது முன்மொழியப்பட்ட சட்டம் அரசியலமைப்பின் வரம்பிற்குள் உள்ளது என்றும், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் 2 இல் உள்ள உள்ளீடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் நாங்கள் பதிலளித்துள்ளோம்.
இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான இந்த வரைவு சட்டம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது” என்று கூறினார்.
தற்போதைய மசோதாவில் ஆன்லைன் சூதாட்டத்தை மட்டும் தடை செய்யும் வகையில் வரைவு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னுரையில், நிபுணர் குழு அளித்த அறிக்கை மற்றும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தரவுகளை தெளிவாகக் குறிப்பிட்டு இந்த வரைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
நேரில் விளையாடும்போது யாருடன் எவ்வாறு விளையாடுகிறோம் என்பதை அளிந்து விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் ஆன்லைனில் அந்த விளையாட்டை உருவாக்கியவர் எழுதும் செயல் திட்டம் அடிப்படையில் விளையாடுவதால் ஏமாற்றும் வாய்ப்புகள் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்ட வரைவு அரசியலமைப்பின் மேற்கூறிய பிரிவு 34-க்கு உட்பட்டது” என்று அமைச்சர் கூறினார்.
ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தால் குடும்பங்கள் அழிந்து, தற்கொலைகளுக்கு வழிவகுக்கிறது. விளையாட்டின் அடிமைத்தனம் பொது சுகாதாரத்தை பாதிக்கிறது, சமூக ஒழுங்கை சீர்குலைக்கிறது என்று சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil