திடீரென எகிறும் காய்கறி விலைகள்தான் பொது மக்களின் கழுத்தைப் பிடிப்பவைகளாக இருக்கின்றன. சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பூண்டு, வெங்காயம், தக்காளி விலை உயர்வு என்பது அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், ஊட்டி பூண்டு விலை ரூ. 4,00-க்கு மேல் உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இதனால், பூண்டு விலை உயர்வால் பூண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், சாதாரண மக்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.
பொதுவாக நீலகிரியில் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற மலை காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், நீலகிரியில் பூண்டு பயிரும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பில் பூண்டு பயிரிட்டு வருகின்றனர்.
ஊட்டி பூண்டு-வினுடைய சிறப்பு என்னவென்றால், மற்ற பகுதிகளில் பயிரிடப்படும் பூண்டைவிட கூடுதல் மணம் மற்றும் காரத்தன்மை அதிகம் என்கிறார்கள் விவசாயிகள். இதனால், வடமாநிங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாரிச் செல்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
மேட்டுப்பாளையத்தில் வாரம்தோறும் பூண்டு விற்பனை செய்ய ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த ஏல மண்டிகளில் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏல மண்டியில் கடந்த சில மாதங்களாக ஊட்டி பூண்டு 400 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதை விவசாயிகளாலேயே நம்பமுடியவில்லை. பூண்டு கொள்முதல் விலை உயர்வால், பூண்டு சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த வாரம் ஒரு விவசாயி கொண்டுவந்த பூண்டு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதால், அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள்.
மேட்டுப்பாளையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பூண்டு ஏலத்தில் முதல் ரக பூண்டு 450 ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. இப்படி ஊட்டி பூண்டு விலை ஒவ்வொரு நாளும் உச்சம் தொட்டு வருவதால் பூண்டு விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஊட்டி பூண்டு விலை உயர்வு குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நீலகிரியில் விளையும் பூண்டுகளை விதைக்காக வடமாநிலங்களில் அதிக அளவில் கொள்முதல் செய்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால், ஊட்டி பூண்டு விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது. வடமாநிலத்தவர்களின் பூண்டு விதை தேவை குறைந்தால் இங்கே பூண்டு விலை குறையும். பூண்டு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில், சில்லறை விற்பனை விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால், சாமானிய மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“