திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் "ஆப்ரேஷன் அகழி" என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நில மோசடி தொடர்பாக திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை திருச்சி மாநகர போலீசார் சோதனை மேற்கொள்ள வந்தனர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் போலீசாரை அனுமதிக்கவில்லை.
இரவு நேரம் என்பதாலும், நீதிமன்ற அனுமதி இல்லை என்பதாலும் போலீசார் உள்ளே செல்லாமல் மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து, அன்றைய தினம் இரவு முழுவதும் வீட்டை சுற்றி போலீசார் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் மறுநாள் 12 மணி வரை காத்திருந்தும் பட்டேல் வீட்டின் கதவு திறக்கப்படாததால் காத்திருந்த போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த வந்தனர். அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் தட்டி நீண்ட நேரம் கடந்தும் திறக்காததால், கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர்.
மதியம் 2:30 மணிக்கு ஆரம்பித்த சோதனை தொடர்ந்து 7 மணி நேரமாக நடைபெற்றது. மேலும், மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் கணக்கெடுத்து பதிவு செய்து அவரது மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.இந்த சோதனைகள் முழுமை பெறாத நிலையில், அடுத்த கட்டமாக மீண்டும் சோதனை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, போலீஸார் சுமார் 500 கிலோ எடை கொண்ட லாக்கரை அங்கிருந்து தகர்த்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியே தூக்கி வந்தனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அந்த லாக்கருக்கு சீல் வைக்கப்பட்டது. இதனிடையே நள்ளிரவு 12 மணி கடந்ததை தொடர்ந்து மோகன் பட்டேலின் மகள் பூர்ணிமா பட்டேல் லாக்கரை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு நிலவியது.
தொடர்ந்து, காவல் துறைக்கு சொந்தமான மீட்பு வாகனம் (கிரேன்) உதவியுடன் லாக்கரை தூக்கி காவல் வாகனத்தில் வைத்து அனுப்பி வைத்தனர். இந்த லாக்கர் நீதிபதி முன் திறக்கப்பட்டு அதில் உள்ள ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்று சோதனையில் ஈடுப்பட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர். சாவி இல்லை என்று லாக்கரை திறக்க மறுத்ததால் போலீஸார் அந்த லாக்கரை கிரேன் மூலம் தூக்கிச் சென்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மோகன் பட்டியல் மகள் பூர்ணிமா பட்டல், "நீதிமன்ற ஆணையுடன் வந்த போலீசாரிடம் நீதிமன்ற ஆணையை காண்பிக்குமாறு கேட்டோம். தொடர்ந்து எங்களது வழக்கறிஞர் வரும் வரை சற்று நேரம் காத்திருக்க சொன்னோம். ஆனால் போலீசார் உடனடியாக வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மேலும் எங்களை மிரட்டி ஆவணங்களை கைப்பற்றினர். அதேபோல் நீதிமன்ற ஆணையின்படி உள்ள ஆவணங்களை மட்டுமல்லாது, மற்ற ஆவணங்களையும் சேர்த்து போலீசார் கைப்பற்றினர்.
ஆவணங்களை எடுத்துச் சென்றபோது என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் சென்றோம் என்பது குறித்த தகவலை அளிக்காமல் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். அதேபோல், இந்த சோதனையானது ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் அழுத்தத்தால் நடைபெற்று வருவதாகவும், சிவில் வழக்கில் காவல்துறையினர் எப்படி தலையிட முடியும், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது காவல்துறையின் அத்துமீறல் வேதனை அளிக்கின்றது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மோகன் பட்டேல் என்பவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நில மோசடி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“