தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு டிஜிபி ஷங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட "ஆபரேஷன் அறம்" பெரும் வெற்றியடைந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜா கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படையின் துரிதமான மற்றும் துல்லியமான நடவடிக்கைகளின் விளைவாக இந்த கைதுகள் சாத்தியமாகியுள்ளன.
இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் அறம் நடைபெற்றது. கோவை மாநகர போலீசாருடன், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய அமைப்புகளுடன் இணைந்து, நீண்ட நாள் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது.
முதல் குற்றவாளி அபுபக்கர் சித்திக் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. 2-வது குற்றவாளி முகமது அலி, 1999ல் குண்டு வெடிப்பு சம்பவம் உள்பட 7 வழக்குகள் உள்ளன. இவர் ஆந்திராவின் கடப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்குட்படுத்த வேண்டும். அதன்பிறகு, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால், முதற்கட்ட விசாரணையிலேயே, தலைமறைவாக இருந்தவர்கள், அந்தந்த ஊரிலேயே டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தனர். மேலும், அடையாள அட்டைகளையும் அடிக்கடி மாற்றி வந்தனர்.
டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. மற்ற இருவருக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர்.
போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் டெய்லர் ராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. 1996ல் நாகூரில் சைதா கொலை வழக்கு, கோவை ஜெயில் வார்டன் பூபாலன், 1997ல் மதுரை ஜெயிலர் உதவியாளர் ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கு,1998ல் கோவை குண்டுவெடிப்பு வழக்குள் டெய்லர் ராஜா மீது உள்ளது.
அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.
ஒரு வழக்கில் 150 அல்லது 160 குற்றவாளிகள் இருக்கும் போது, 2 அல்லது 3 பேர் ரொம்ப நாள் தலைமறைவாக இருந்தாலும், அது வெற்றிகரமான ஆபரேஷன் தான். அதேபோல, ஒரு வழக்கில் தொடர்புடைய 150 பேரும் தலைமறைவாக இருந்தால்தான் அந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டதாக அர்த்தம்.
கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சங்கர் ஜிவால் கூறினார்.