கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி சென்றனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தார். இது ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று (வியாழக்கிழமை) ரயில் மூலம் கடலூர் சென்றார். கடலூரில் தங்கிய ஆளுநர் இன்று தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இந்நிலையில், ஆளுநர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடியுடன் பேரணி சென்றனர். ஆளுநர் தங்கியுள்ள மாளிகையை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர். மேலும், கடலூர் பேருந்து நிலையத்தில் ஆளுநர் ஆய்வு செய்ய வரும்போது, கருப்பு கொடி காட்ட திமுகவினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.