Advertisment

இ.பி.எஸ் உடன் இருப்பவர்கள் பலர் என்னிடம் மறைமுகமாக பேசி வருகிறார்கள்: ஓ.பி.எஸ் பகீர்

3-வது முறையாக மோடியே மீண்டும் பிரதமராக வருவார். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

author-image
WebDesk
New Update
OPS Tri.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினரின் திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி வி.எஸ்.எம் மஹாலில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார்.

Advertisment

இதில் புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எண்டபுளி ராஜ்மோகன், வீர வசனம் கழக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ரத்தினவேல், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சாமிகண்ணு ஆகியோர் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்தை வான வேடிக்கையுடன், மேல தாளங்கள் முழங்க கழக மகளீர் அணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மாலை அணிவித்து வீரவாள் மற்றும் நடராஜர் படத்தை பரிசாக வழங்கினார். 

தொடர்ந்து ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி கேட்ட பதவிகள் முதல்வர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை கொடுத்து விட்டோம். தேர்தலில் முறைப்படி ஏற்கனவே பாஜகவுடன் இருப்பதாக தெரிவித்து விட்டோம். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் மற்றும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 

OPS Tri1.jpg

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொழிலாளர்களுக்கான அகவிலைப்படியை வழங்கிய உடனே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதனை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதாலேயே அவர்களுக்கு எங்களது ஆதரவை அளித்துள்ளோம். திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனுடைய விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் தெரிய வரும். மேலும், மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் மோடி அவர்கள் பிரதமராக வருவார் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். திருச்சிக்கு வருகை தந்த பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

மேலும் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணமும் அதுவே. ஏன் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றுசேர விட மாட்டேங்கிறார் என கேள்வி அனைவரும் மனதில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்துடன் செயல்படுகிறார்.  

OPS Tri2.jpg

50 ஆண்டு கால அதிமுகவின் சட்ட விதிகளை பின்பற்றிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த இயக்கம் இது. எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருப்பவர்கள் பலர் என்னிடம் மறைமுகமாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மன வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்தார்கள். நாங்கள் என்ன சொன்னாலும் அதை எடப்பாடி பழனிச்சாமி பொருட்படுத்த மாட்டேங்கிறார். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தேர்தல் நேரத்தில் மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்படும் என தெரிவித்தார்கள், ஆனால், இதுவரை எதுவும் நடைபெறவில்லை. 

ஏன் அதிமுக அனைவரும் ஒன்றிணையமாட்டார்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். மேலும் நீங்கள் இருவரும் ஒன்றிணைந்தால், இரு அணி நிர்வாகிகளின் பதவிகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் இணையும் போது அதை பார்த்துக் கொள்ளலாம், இப்போது அதை கேட்டு எங்களுக்குள் சண்டை மூட்டி விடாதீர்கள் என்றார்.  இந்திய நாட்டில் இருக்கக்கூடிய அனைவரின் எண்ணமும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதே ஆகும். இந்தியா கூட்டணி பற்றி கேட்ட கேள்விக்கு, ஆண்டிகள் கூடி கட்டிய மடம் என்று தெரிவித்தார். 

தேர்தல் நேரத்தில் இறைவன் கொடுத்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். நாங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, சட்டப்படி என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். எங்களுடைய இலக்கு நியாயமானது அதை நோக்கி நாங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். என் மீது எத்தனை அடிகள் விழுந்தாலும் நான் பந்து போன்று மீண்டும் மீண்டும் எழுந்தரித்துக் கொண்டே இருப்பேன்.  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் ஒன்றிணைவது, கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, இவை எல்லாம் உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், கழக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக,  அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்திலும்  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment