சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2019 – 20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், கடந்த 8ம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நேற்று (பிப்.11) தொடங்கியது.
அப்போது பேசிய திமுக உறுப்பினர் செங்குட்டுவன், 'பிரதமரிடம் அதிமுக இணக்கமாக உள்ள நிலையில் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்டுப்பெற தயங்குவது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை என்றாலும், மாநில அரசின் நியாயத்தை மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தும் அதேநேரத்தில், எதற்கும் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 52 சதவீதம் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பலமுறை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை" என்று பதிலளித்தார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் இதுவரை மறுக்கவில்லை. ஆனாலும், அதிமுக எம்.பி. தம்பிதுரை பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக, நேற்று டெல்லியில் மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் பேசிய தம்பிதுரை பாஜக அரசின் திட்டங்களை காரசாரமாக விமர்சித்துப் பேசினார். அதற்கு அவையிலேயே ராகுல் காந்தி கைக் கொடுத்து பாராட்டினார்.
முழுவதும் படிக்க - அதிமுகவின் 'இரட்டை நிலை'! பாஜக மீதான தம்பிதுரையின் நான்-ஸ்டாப் அட்டாக் பின்னணி!
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற நிலையில், தம்பிதுரையின் தொடர் குற்றச்சாட்டுகள், அதற்கு ராகுலின் நேரடியான ஆதரவு போன்றவற்றை பார்க்கும் போது அது தம்பிதுரையின் தனிப்பட்ட குற்றச்சாட்டா அல்லது அதிமுகவின் குரலா என்பது குழப்பமாகவே உள்ளது.
இந்நிலையில், நேற்று ஓ.பி.எஸ்ஸும் மத்திய அரசின் ஒத்துழையாமை குறித்து சட்டப்பேரவையில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால், அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இதுஒருபுறம் இருக்க, இன்று சட்டப்பேரவையில் நடந்த தமிழக பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது, 'தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா அல்லது தமிழக அரசின் கருத்தா' என திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல. எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை. மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளார், அதில் என்ன தவறு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.