ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரான இளவரசி, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஓ.பி.எஸ் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை வழங்க விஜயபாஸ்கரிடம் கூறினேன் என்று ஓ.பி.எஸ் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் மரணமடைந்தார். அவருடைய மரணத்தில், மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் சந்தேகங்களை எழுப்பினர். இதையடுத்து, 2017ம் ஆண்டு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணையை முழுமையாக முடிப்பதற்கு கால அவகாசம் கேட்டதையடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோது விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அவர் துணை முதல்வராக இருந்ததால், பணிகள் காரணமாக ஆஜராவதில் இருந்து அவகாசம் கேட்டு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019-ல் இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது
இந்த நிலையில், கடந்த மார்ச் 7ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது. அப்போலோ மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் என 6 பேரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆறுமுசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். அவருக்கு முன்னதாக, இளவரசியும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல்முறையாக ஆஜரான இளவரசி, ஆணையத்தில் கூறியதாக சில உறுதி செய்யப்படாத செய்திகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அதன்படி, “நான் 75 நாள்களும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். ஆனால், ஒரு சில முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன். போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தாலும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள மாட்டார். 2014-ம் ஆண்டு ஜெயலலிதா உடன் சிறைக்குச்சென்றேன். அப்போதே அவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்தார் என்று இளவரசி கூறியதாகவும், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டதாகவும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே போல, ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் இருந்ததைத் தவிர, அவருக்கு இருந்த வேறு உடல்நலக் குறைபாடுகள் குறித்து எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பி.எஸ் இடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆணையத்தில் ஓ.பி.எஸ் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் இருப்பது மட்டுமே தனக்கு தெரியும். அதுதவிர அவருக்கு இருந்த வேறு உடல்நலக் குறைவுகள் குறித்து எதுவுமே தெரியாது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்த பிறகு பார்க்கவேயில்லை. அதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் நிலைய நிகழ்ச்சியில்தான் கடைசியாகப் பார்த்தேன்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியாது. அதேவேளையில், அவருக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது. எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்பது குறித்தும் தெரியாது.
சொந்த ஊரில் இருந்தபோதுதான், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்து கொண்டேன். சென்னை திரும்பியதும், தலைமைச் செயலாளரிடமே, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்.
பிறகு ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி விசாரணை ஆணையம் அமைத்தது ஏன் என்ற கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது துணை முதல்வர் என்பதால், ஆறுமுகசாமி ஆணையத்தின் கோப்புகளில் கையெழுத்திட்டேன் என்று ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஜெயலலிதாவுக்கு இதயபாதிப்பு இருப்பது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை வழங்க விஜயபாஸ்கரிடம் கூறினேன் என்றும் ஆணையத்தில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு ஓ.பி.எஸ் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஓ.பி.எஸ் நாளையும் ஆஜாராகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.