ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி எதிரொலி: நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி உட்பட 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னையில் நடந்த அதிமுக உயர்மட்டக்குழு குழு கூட்டத்தில் டிடிவி ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க முடிவு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த அதிமுக உயர்மட்டக்குழு குழு கூட்டத்தில், டிடிவி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவில் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உட்பட 5 பேர் நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி பொறுப்புகளிலிருந்து மட்டும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் தோல்வி அடையவில்லை. டிடிவி எப்படி வென்றார் என்று எங்களுக்கு தெரியும். டிடிவி தினகரனும், ஸ்டாலினும் கூட்டுச் சேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க முயற்சி செய்தனர். ஸ்டாலின், தினகரனுடன் ரகசிய கூட்டு வைத்து சதி செய்துள்ளார். மாயாஜாலம் செய்து மக்களை ஏமாற்றி தினகரன் வென்றுள்ளார். ஜெயலலிதா மீது உண்மையான அன்பும், மரியாதையும் இருந்திருந்தால், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டனாக இருந்திருந்தால், அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு முறையும் ஜனநாயக முறைப்படித் தான் நாங்கள் தேர்தலை எதிர்கொள்கிறோம். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நாங்கள் இடைத் தேர்தலை சந்தித்து இல்லை. எங்கள் ஆட்சி, இப்போது கலையும், அப்போது கலையும் என்று சொன்னார்கள். ஆனால், தமிழகத்தில் 11 மாதங்களாக அம்மாவின் ஆட்சி எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நானே எடப்பாடியில் வெற்றியும் பெற்றுள்ளேன், தோல்வியும் பெற்றுள்ளேன். ஆகையால், இந்த தோல்விக்கு கவலைப்படத் தேவையில்லை. இது மாயாஜாலம் செய்து பெறப்பட்ட வெற்றியாகும் என்றார்.

துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில்,

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். எங்கள் பக்கம் இருப்பவர்கள் அனைவரும் புடம்போட்ட தங்கங்கள். தேர்தல் வெற்றிக்கு பிறகு இதுவரை யாரும் எங்கள் அணியில் இருந்து அங்கு செல்லவில்லை.

தினகரன் பேசுவதெல்லாம் பொய். நான் 1980-லேயே அரசியலுக்கு வந்தவன். டிடிவி 1998-ல் தான் அரசியலுக்கு வந்தார். அவருக்கு நான் 18 வருடம் சீனியர். ஆனால், அவர் பன்னீர் செல்வத்தை நான் தான் அரசியலில் அறிமுகம் செய்தேன் என்கிறார். அவர் பேசுவது அனைத்தும் பொய்.

‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு-னு’ ஏற்கனவே தினகரன் எங்களிடம் கூறி இருந்தார். அதேபோல், நான் ஒரு 420 என்றும் கூறியிருந்தார். அது நான் உண்மையும் கூட.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் நாங்கள் அவரை உள்ளே சென்று பார்க்கவில்லை. எங்களை பார்க்கவும் சசிகலா குடும்பத்தினர் விடவில்லை. தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான், நாங்கள் யாரும் ஜெயலலிதாவை சிகிச்சையின் போது பார்க்கவில்லை.

டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் வாரிசு என திருமாவளவன் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.

அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி சகஜம். இந்த பின்னடவை எப்படி சரிசெய்வது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

2ஜி வழக்கை ஆரம்பித்தது ஜெயலலிதா தான். ஆனால், திமுக அதிலிருந்து விடுதலை ஆன பின்னர், முண்டியடித்துக் கொண்டு முதலில் வாழ்த்து சொன்னவர் தினகரன். இதிலிருந்தே அவர் கட்சிக்கு எந்தளவிற்கு துரோகம் செய்துள்ளார் என அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

எங்கள் அணியில் உட்கட்சி பூசல் இல்லை. அதிமுகவில் இருந்து ஒரு சிறிய செங்கல்லை கூட யாரும் உருவ முடியாது என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close