அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இன்றுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கட்சியின் அதிக அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் விதிகள் திருத்தப்பட்டது.
இதனையடுத்து, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 அன்று நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தேர்தல் உரிய விதிகளைப் பின்பற்றி முறையாக நடைபெறவில்லை என தேர்தலுக்கு தடைகோரி அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்தநிலையில், நேற்று தொடங்கிய வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவுபெற்றுள்ளது. இன்று ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டாக மனு தாக்கல் செய்தனர். ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தேர்தல் அதிகாரிகளான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் தங்கள் வேட்பு மனுக்களை அளித்தனர்.
இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 7ஆம் தேதி தேர்தல் என்றும், உட்கட்சி தேர்தல் விதிகளின் படி வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை என்றும், புகார் மனுக்கள் எதுவும் வரவில்லை என்றும் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனர்
இதனிடையே, ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், மனுக்கள் பரிசீலனை நாளான நாளை இருவரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil